எரிசக்தி அமைச்சகம்
அரசின் நட்சத்திரக் குறியீடு வழங்கும் முறையால் குளிர்சாதனப் பெட்டிகளின் ஆற்றல் செயல்திறன் அதிகரித்துள்ளது
Posted On:
10 MAY 2023 12:48PM by PIB Chennai
இந்தியாவின் எரிசக்தி செயல்திறன் கொள்கைகள், குளிர்சாதனப் பெட்டிகளின் ஒட்டுமொத்த எரிசக்தி செயல்திறனை மேம்படுத்தி இருப்பதோடு, அதிக ஆற்றல்திறன் கொண்ட இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டையும் துரிதப்படுத்தியுள்ளது. எரிசக்தி அமைச்சகத்தின் எரிசக்தி செயல்திறன் அமைவனத்தின் தரவுகள் படி, 1 நட்சத்திர குறியீடு ஸ்பிளிட் குளிர்சாதனப் பெட்டியின் ஒட்டுமொத்த செயல்திறன் 43%மும், 5 நட்சத்திர குறியீடு அளவின் செயல்திறன் 61%மும் மேன்மை அடைந்துள்ளன. மறுபுறம், ஜன்னல்களில் பொருத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளின் செயல்திறன் முறையே 17%மும், 13%மும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
மத்திய அரசின் இடையீடுகளால் திறன் வாய்ந்த இன்வெர்ட்டர் குளிர்சாதனப் பெட்டிகளின் சந்தையும் அதிகரித்துள்ளது. 2015-16 முதல் 2022-23 வரையிலான எட்டு ஆண்டுகளில் இந்த வகை குளிர்சாதனப் பெட்டிகளின் சந்தை 1%லிருந்து 99%ஆக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் இன்வெர்ட்டர் அல்லாத குளிர்சாதனப் பெட்டிகளின் சந்தை 99%லிருந்து 23%ஆகக் குறைந்துள்ளது.
நட்சத்திரக் குறியீடு அடிப்படையிலான திட்டத்தின் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமார், இத்திட்டம் எதிர்பார்க்கப்பட்ட பலன்களைத் தருவதாகத் தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறி வருவதால் அடுத்த சில தசாப்தங்களில் குளிரூட்டலுக்கான தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இந்திய குளிரூட்டல் செயல்திட்டத்தின் கீழ் விரிவான திட்டம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் நமது வளர்ச்சிக்கான தேவைகள் செயல்திறன்மிக்க வகையில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
----
AD/BR/KPG
(Release ID: 1923108)