அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அறிவியல் துறையினருக்கு இது சிறந்த நேரம்- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
09 MAY 2023 1:35PM by PIB Chennai
இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அறிவியல் துறையினருக்கு இது சிறந்த நேரம் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அவர்களின் திறமைகள், படைப்பாற்றல், புதுமையான உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கு உதவும் சூழலை வழங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகளின் இயக்குநர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் வரவேற்புரை நிகழ்த்திய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிவியலுக்கு சிறப்பான ஊக்கத்தை அளித்திருக்கும் நேரத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாக கூறினார். பிரதமரின் திறமையான தலைமையின் காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது என்றார் அவர்.
அறிவியல், தொழில்நுட்பத்துறையின் 16 நிறுவனங்கள் சேர்ந்து ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், இவற்றில் சில மிகவும் பழமையான ஆராய்ச்சி நிறுவனங்கள் என்றும் கூறிய அவர், நாட்டின் மிகப் பழமையான ஆராய்ச்சி நிறுவனங்களில் சில, மகேந்திர லால் சர்கார், சி.வி. ராமன், ஜே.சி. போஸ், பீர்பால் சாஹ்னி மற்றும் டி.என். வாடியா போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் தனிநபர்களால் தொடங்கப்பட்டவை என்றார். சில மிகவும் பழமையான மற்றும் களஞ்சியங்கள். அறிவியல், தொழில்நுட்பத்துறை குடும்பத்தில் உள்ள பெரும்பாலானவை அடிப்படை ஆராய்ச்சி நிறுவனங்கள். திருவனந்தபுரம் ஶ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஹைதராபாத் சர்வதேச ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் போன்றவை சில விதிவிலக்குகள். திருவனந்தபுரம் ஶ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உள்நாட்டு உயிரியல் மருத்துவ சாதன மேம்பாட்டுத் துறையில் தேசிய அளவில் பிரகாசிக்கும் ஜோதியாக உள்ளது. இது நமது மக்களின் சுகாதாரச் செலவைக் குறைக்க உதவி வருகிறது.
கொவிட் பெருந்தொற்று சூழ்நிலையில், இந்த நிறுவனம், பல தயாரிப்புகளுடன் வெளிவருவதற்கான விரைவான பாதையை உருவாக்கியது. அவற்றில் சில ஏற்கனவே வணிகமயமாக்கப்பட்டு, கோவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதற்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளன என்பதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். ஹைதராபாத் நிறுவனம், மேம்பட்ட பொருட்கள் துறையில் முதன்மையான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பரிமாற்ற அமைப்பாக தனக்கென ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களின் தயாரிப்புகளால் உருவான ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் விருதுகள் நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
புதுதில்லி இந்திய தேசிய அறிவியல் அகாடமி, பெங்களூரு இந்திய அறிவியல் அகாடமி, அலகாபாத் தேசிய அறிவியல் அகாடமி, புதுதில்லி இந்திய தேசிய பொறியியல் அகாடமி, கொல்கத்தா இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் ஆகிய நாட்டின் 5 முதன்மை அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்முறை அமைப்புகளும் அறிவியல் தொழில்நுட்பத்துறை குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றில் பெரும்பாலானவை, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பு உட்பட, புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் தனிநபர்களால் நிறுவப்பட்ட மிகப் பழமையான அமைப்புகளாகும் என்று டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
சமீபத்தில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குவாண்டம் தொழில்நுட்பத்தில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவும் தேசிய குவாண்டம் இயக்கத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் கூறினார். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
அமிர்த காலத்தில், நாட்டின் வளங்களையும், மனித வளத்தையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள, அனைத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களும் ஒத்துழைப்பு முறையில் செயல்படுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1922742
***
SM/PKV/KPG
(Release ID: 1922835)
Visitor Counter : 133