அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சமூக மீள்திறன் வள மையங்கள் மூலம் நிலையான எதிர்காலத்திற்காக சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை விவாதிக்கும் நிகழ்வு

Posted On: 05 MAY 2023 6:26PM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச எஸ்டிஐ மன்றம் 2023 என்ற நிகழ்வில் உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) செயலாளர், இந்தியாவில் கொரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சிக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான வழிமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

 

ஹைட்ரஜன் அடிப்படையிலான ஆற்றல், புதிய நிலையான ஆற்றல் அமைப்புகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்த அறிவைப் பகிர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய டாக்டர். சந்திரசேகர், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள் மற்றும் பிற அறியப்படாத நோய்கள் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான பூமியை உருவாக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

இது போன்ற நிலையற்ற சூழல் மனித குலத்திற்கு புதிதல்ல என்றும், பல சமூகங்கள் இந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை சமாளிக்க புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டறிந்துள்ளன என்றும் டாக்டர் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.

“அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை போன்றவை சமூக மீள்திறனை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புதிய சந்தைக்குத் தயாராகும் தொழில்நுட்பங்கள் பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் மீள்திறனை அதிகரிப்பதற்கான புதுமையான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. கொரோனா தொற்றுநோய் உச்சத்தில் இருந்த போது, ​​தொற்றுநோய் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய சமூக - பொருளாதார மேம்பாட்டுக்காக சமூக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு (எஸ்டிஐ) திறன்களை வளர்ப்பதற்காக சமூக மீள்திறன் வள மையங்களை (சிஆர்ஆர்சி) நிறுவுவதற்கான முயற்சி தொடங்கப்பட்டது” என்றார்.

 

சமூக மீள்திறன் வள மையங்கள் மூலம் சமூகங்கள் நிலையான எதிர்காலத்திற்கான வழிகளைத் தேர்வு செய்வதோடு, நிச்சயமற்ற நிலையை சமாளிக்க முடியுமெனவும்,

அவை இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை எளிதாக்கும் எனவும் யுஎன்டிபி இந்தியப் பிரதிநிதி திருமதி ஷோகோ நோடா கூறினார்.

 

இந்தியாவிற்கும் உலகிற்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பிற்கான திட்டங்கள் குறித்து நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமூக அடிப்படையிலான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் அறிவியல் கருவிகளை தரம் உயர்த்த சர்வதேச ஆராய்ச்சித் தளங்களை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

***

AD/CR/DL



(Release ID: 1922181) Visitor Counter : 98


Read this release in: English , Urdu , Hindi , Telugu