வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சிறிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
29 APR 2023 1:45PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மும்பையில் இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'இந்தியா அழைக்கிறது மாநாடு 2023' -ல் (India Calling Conference 2023) இன்று (29.04.2023) தொடக்க உரை ஆற்றினார். உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களின் விநியோகச் சங்கிலியில் செக் குடியரசு மற்றும் போலந்து போன்ற சிறிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியா 2047-ம் ஆண்டில் சுதந்திரத்தின் நூற்றாண்டின்போது, 47 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாத் திகழ வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். இந்தியா தமது பொருளாதாரத்தை சீரமைத்து முறைப்படுத்துவதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். வெற்றிக்கு, கூட்டு செயல்பாடு, போட்டித்திறன் மற்றும் நேர்மறை உணர்வு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வகையான உணர்வுகள் மும்பையில் அதிகம் உள்ளதாக அவர் தெரிவித்தார். இது இந்தியாவின் நிதி தலைநகரம் மட்டுமல்ல எனவும் உற்சாகத்தின் தலைநகரமாகவும் திகழ்வதாகவும் அவர் கூறினார்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் இந்தியாவின் மீது அதிக நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை பல நாடுகளுடன் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் செழிப்பு ஏற்படும்போதுதான் உண்மையான செழிப்பு ஏற்படும் என்று இந்தியா நம்புகிறது என அவர் தெரிவித்தார். தடுப்பூசித் தோழமைத் திட்டத்தில் இந்தியா 278 மில்லியன் டோஸ்களை ஏழை நாடுகளுக்கு இலவசமாக வழங்கியதை அவர் சுட்டிக் காட்டினார். உலகம் பாதுகாப்பாக இருக்கும்போதுதான் இந்தியாவும் பாதுகாப்பாக இருக்கும் என இந்தியா உணர்வதாக அவர் கூறினார்.
***
AP/PLM/DL
(Release ID: 1920758)
Visitor Counter : 168