மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

உலக கால்நடை தினத்தையொட்டி கால்நடைப் பராமரிப்புத் துறை, கால்நடை மருத்துவக் கவுன்சிலுடன் இணைந்து புதுதில்லியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது - கால்நடை மருத்துவக் கவுன்சிலுக்கான இணையதளத்தை மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்

Posted On: 29 APR 2023 2:53PM by PIB Chennai

75 வது விடுதலை அமுதப் பெருவிழாவின் (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) ஒரு பகுதியாக, கால்நடைப் பராமரிப்புத் துறை, இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலுடன் இணைந்து, உலக கால்நடை தினம்- 2023ஐ இன்று (29.04.2023 ) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் கொண்டாடியது. விலங்குகள் ஆரோக்கியம் மற்றும் சூழலியலில் கால்நடை மருத்துவர்களின் முக்கியப் பங்கு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக கால்நடை மருத்துவ தினத்தின் கருப்பொருள் "கால்நடை மருத்துவத் தொழிலில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய தன்மையை ஊக்குவித்தல்" என்பதாகும்.

 

இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யானும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடைத் துறையின் முக்கியப் பங்களிப்பை எடுத்துரைத்தார். கால்நடை வளர்ப்புத் தொழிலை மிகவும் திறன் மிக்கதாகவும், நிலையானதாகவும் மாற்றுவதே அரசின் நோக்கம் என்று அவர் கூறினார். இத்துறையில் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இத்துறையின் முழுமையான வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற தமது அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். அமைச்சகத்தின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கால்நடை மருத்துவர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியின்போது இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலின் (VCI) இணையதளத்தை திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவ நடைமுறைகளுக்கான குறைந்தபட்ச தர ஒழுங்குமுறை வரைவு -2023ஐ (MSVPR- 2023) இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வெளியிட்டார். சிறந்த கால்நடை மருத்துவர்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் திரு சஞ்சய் குமார் பல்யான், நாட்டின் விவசாயத் துறையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை கால்நடைத்துறை செய்து வருவதாகக் கூறினார். கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனை உறுதி செய்வதன் மூலம் தேசப் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை மருத்துவர்கள் பங்காற்றுவதாக அவர் எடுத்துரைத்தார்.

 

 

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 1500 கால்நடை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் 75 கால்நடை மருத்துவர்கள் சிறந்த கால்நடை மருத்துவர்களாக கௌரவிக்கப்பட்டனர். கால்நடைகளின் ஆரோக்கியம், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கால்நடை மேலாண்மை உள்ளிட்டவை தொடர்பான தொழில்நுட்ப அமர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

***

AP/PLM/DL



(Release ID: 1920756) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Hindi