குடியரசுத் தலைவர் செயலகம்
இமாச்சாலப் பிரதேசப் பல்கலைக்கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Posted On:
19 APR 2023 5:42PM by PIB Chennai
சிம்லாவில் உள்ள இமாச்சாலப் பிரதேசப் பல்கலைக்கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர், கடந்த 1970-ம் ஆண்டு முதல் உயர் கல்வித்துறைக்கு இமாச்சலப்பிரதேசப் பல்கலைக்கழகம் மிக முக்கியப்பங்கு வகித்து வருவதாகக் கூறினார். இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் கலை, மருத்துவம், நீதி, விளையாட்டு, சமூக சேவை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது தலைசிறந்த பங்களிப்பை அளித்து வருவதை நினைவு கூர்ந்தார்.
இமாச்சலப் பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை, உலக நாடுகளின் மக்களை வெகுவாகக் கவர்ந்து வருவதுடன், இந்தப் பகுதி பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தொன்மை வாய்ந்த புகலிடமாகத் திகழ்வதையும் குறிப்பிட்டார். இருப்பினும், பருவநிலை மாறுபாடு, இந்த மாநிலத்தின் சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், இந்தத் தொன்மை வாய்ந்த இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன், நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை எட்டுவதற்கும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதே தற்போதையத் தேவை என்று குறிப்பிட்டார்.
அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், சீர்திருத்தத்திற்கான உத்வேகம் ஆகியவற்றை உருவாக்குவதே ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும் என்றார். பட்டம் பெற்று வாழ்வில் அடுத்த அத்தியாயத்திற்குள் நுழையும் மாணவர்கள், தங்களது தனிப்பட்ட இலக்கையும், தேசத்தின் இலக்குகளையும் இணைத்துக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் துறைகளைத் தேர்ந்தெடுத்து தங்களின் பங்களிப்புடன் பீடு நடைப்போடவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்திய இளைஞர்கள் உலகளவில் தங்களது திறமைகளை நிரூபித்து சாதித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெரும்பாலானவர்கள் ஸ்டார்ட் –அப் நிறுவனங்களை உருவாக்கியிருப்பதே இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றும் கூறினார்.
இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக வலம் வருவதற்குத் தேவையான ஊக்குவிப்புகளை வழங்கி அவர்களைப் பாதுகாக்கும் மையங்களை உருவாக்க, இமாச்சலப்பிரதேசப் பல்கலைக்கழகம் முனைப்பான நடவடிக்கையை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாகக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
(Release ID: 1917973)
***
AP/ES/RS/KRS
(Release ID: 1918028)
Visitor Counter : 154