பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
2023 ஏப்ரல் 17-18ம் தேதிகளில் பயோ-கேஸ் சார்ந்த உலகளாவிய மாநாடு
Posted On:
15 APR 2023 11:57AM by PIB Chennai
புதுதில்லியில் ஏப்ரல் 17-18ம் தேதிகளில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை சார்பில் உயிரி-எரிபொருள் (பயோ-கேஸ்) சார்ந்த உலகளாவிய மாநாடு நடைபெறவுள்ளது. இந்திய பசுமை எரிவாயு கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் சுத்திகரிக்கப்பட்ட பயோ-கேஸ் தொழிற்சாலைகள் மேம்பாட்டிற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் முனைப்பான நடவடிக்கைகள், கொள்கையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
மத்திய வீட்டுவசதி, நகர்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறைச் செயலாளர் திரு.பங்கஜ் ஜெயின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
2070ம் ஆண்டு வாயு உமிழ்வில்லாத இந்தியாவை உருவாக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மலிவானப் போக்குவரத்தை முன்னோக்கிய நீடித்த மாற்று திட்டத்தின் கீழ் வாயு உமிழ்வை குறைப்பதில் சுத்திகரிக்கப்பட்ட பயோ-கேஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை கருத்தில் கொண்டு பயோ-கேஸ் சார்ந்த நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிக கலோரி மதிப்பைக் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட பயோ-கேஸ் என்பது சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஒத்த அம்சங்களை கொண்டிருப்பதால், அதனை பசுமையான புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு சிறந்த மாற்றாகப் பயன்படுத்த முடியும்.
இந்த மாநாட்டில் சுத்திகரிக்கப்பட்ட பயோ-கேஸ் ஆலை அமைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட், கெயில் உள்ளிட்ட இந்திய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
***
SRI/ES/SG/DL
(Release ID: 1916851)
Visitor Counter : 181