பிரதமர் அலுவலகம்

ஏப்ரல் 14-ஆம் தேதி பிரதமர் அசாம் பயணம்


ரூ. 14,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் திறந்து வைத்து பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்

குவஹாத்தி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அசாமில் 3 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைக்கவிருக்கிறார்

‘ஆப்கே த்வார் ஆயுஷ்மான்’ எனப்படும் உங்கள் இல்லம் தேடி மருத்துவம் பிரச்சாரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

மேம்படுத்தப்பட்ட அசாம் சுகாதார புத்தாக்க நிறுவனத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்

பலாஷ்பரி மற்றும் சுவால்குச்சியை இணைத்து, பிரம்மபுத்திரா நதி மீது அமைக்கப்படவுள்ள பாலத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்

சிவசாகரில் உள்ள ரங் கர் கட்டிடத்தை எழில்படுத்தும் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்

10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பிஹு நடன நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளிப்பார்

Posted On: 12 APR 2023 9:45AM by PIB Chennai

ஏப்ரல் 14, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அசாமிற்கு பயணம் மேற்கொள்வார்.

நண்பகல் 12 மணி அளவில் குவஹாத்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லும் அவர், அங்கு கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை ஆய்வு செய்வார். அதைத்தொடர்ந்து நடைபெறும் விழாவில், குவஹாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையையும், இதர மூன்று மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மேம்படுத்தப்பட்ட அசாம் சுகாதார புத்தாக்க நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் அவர், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்ட அட்டைகளை விநியோகித்து, ‘ஆப்கே த்வார் ஆயுஷ்மான்’ எனப்படும் உங்கள் இல்லம் தேடி மருத்துவம் பிரச்சாரத்தையும் தொடங்கி வைப்பார்.

பிற்பகல் 2:15 மணி அளவில் குவஹாத்தியில் உள்ள ஸ்ரீமாந்தா சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் நடைபெறும் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்வார்.

மாலை 5 மணிக்கு குவஹாத்தியில் உள்ள சாருசஜாய் மைதானத்திற்கு செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்பதுடன், 10,000க்கும் மேற்பட்ட கலைஞர்களின் வண்ணமயமான பிஹு நடன நிகழ்ச்சியையும் கண்டு களிப்பார். நம்ரூப்பில், நாளொன்றுக்கு 500 டன் மெத்தனாலை உற்பத்தி செய்யும் ஆலையின் திறப்பு; பலாஷ்பரி மற்றும் சுவால்குச்சியை இணைத்து பிரம்மபுத்திரா நதி மீது அமைக்கப்படவிருக்கும் பாலத்திற்கு அடிக்கல்; சிவசாகரில் உள்ள ரங் கர் கட்டிடத்தை எழில்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் மற்றும் ஐந்து ரயில்வே திட்டங்களின் துவக்கம் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நிகழ்ச்சியின் போது அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பார்.

குவஹாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர்:

ரூ. 3400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்பணிப்பார்.

குவஹாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையின் திறப்பு, அசாம் மாநிலத்திற்கும், ஒட்டுமொத்த வடகிழக்கு பகுதிக்கும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருக்கும். நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்கும். கடந்த 2017, மே மாதத்தில் இந்த மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியிருந்தார். ரூ. 1120 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குவஹாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையில் 30 ஆயுஷ் படுக்கைகள் உட்பட 750 படுக்கைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 100 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் கல்வி பயிலும் திறனை இந்த மருத்துவமனை பெற்றுள்ளது. வடகிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை இந்த மருத்துவமனை வழங்கும்.

ரூ. 615 கோடி மதிப்பில் நல்பாரியில் அமைக்கப்பட்டுள்ள நல்பாரி மருத்துவக் கல்லூரி, நல்காவோனில் ரூ. 600 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நல்காவோன் மருத்துவக் கல்லூரி மற்றும் கோக்ரஜாரில் ரூ. 535 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள கோக்ரஜார் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளையும் பிரதமர் திறந்து வைப்பார். மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் அவசரகால சேவைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை மையங்கள் மற்றும் பரிசோதனை மையங்கள் உட்பட உள்நோயாளிகள் பிரிவு/ புற நோயாளிகள் பிரிவுடன் 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 100 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் கல்வி பயிலும் திறனை இந்த மருத்துவமனைகள் பெற்றுள்ளன.

நலத்திட்டங்களின் பலன்கள் 100% பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் ‘ஆப்கே த்வார் ஆயுஷ்மான்’ எனப்படும் உங்கள் இல்லம் தேடி மருத்துவம் பிரச்சாரத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டைகளை மூன்று பயனாளிகளுக்கு பிரதமர் வழங்குவார். அதன் பிறகு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 1.1 கோடி அட்டைகள் விநியோகிக்கப்படும்.

சுகாதாரத்துடன் தொடர்புடைய துறைகளில் தற்சார்பு நிலையை அடைவது மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட அசாம் சுகாதார புத்தாக்க நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. நாட்டில், சுகாதாரத்துறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் இறக்குமதி செய்யப்படுவதோடு, விலை அதிகமானதாகவும், இந்திய சூழலில் அவற்றை இயக்குவது சவாலானதாகவும் இருந்து வருகிறது. ‘நமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளைக் கண்டறிவது’ என்ற நோக்கத்துடன் இந்த மையம் உருவாக்கப்படவுள்ளது. நம் நாட்டில் நிலவும் மருத்துவத்துறையுடன் சம்பந்தப்பட்ட பிரத்தியேக பிரச்சனைகளைக் கண்டறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ. 546 கோடி மதிப்பில் இந்த மையம் கட்டப்பட உள்ளது.

ஸ்ரீமாந்தா சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் பிரதமர்:

குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்வார்.

இந்த நிகழ்ச்சியின் போது, அசாம் காவல்துறையால் வடிவமைக்கப்பட்டுள்ள ‘அசாம் காப்' என்ற செல்பேசி செயலியை அவர் அறிமுகப்படுத்துவார். குற்றம் மற்றும் குற்றவியல் இணைப்பு கண்காணிப்பு அமைப்புமுறை மற்றும் வாஹன் தேசிய பதிவேட்டின் தரவுகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் வாகனங்களின் தேடல்களை இந்த செயலி எளிதாக்கும்.

கடந்த 1948-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட குவஹாத்தி உயர்நீதிமன்றம்,  மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு கடந்த 2013, மார்ச் மாதத்தில் தனித்தனியே உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்படும் வரை, அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு வட கிழக்கு மாநிலங்களுக்கு பொதுவான நீதிமன்றமாக செயல் புரிந்தது. குவஹாத்தி உயர்நீதிமன்றம், தற்போது அசாம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களின் அதிகார வரம்பைப் பெற்றுள்ளது. இந்த உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு குவஹாத்தியிலும், கொஹிமா (நாகாலாந்து), ஐஸ்வால் (மிசோரம்) மற்றும் இட்டாநகரில் (அருணாச்சலப் பிரதேசம்) நிரந்தர அமர்வுகளும் இயங்குகின்றன.

சாருசஜாய் மைதானத்தில் பிரதமர்:

ரூ. 10,900 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார்.

பலாஷ்பரி மற்றும் சுவால்குச்சியை இணைத்து பிரம்மபுத்திரா நதி மீது அமைக்கப்படவுள்ள பாலத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.  இந்தப் பகுதியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இணைப்பை இந்த பாலம் வழங்கும். திப்ருகரின் நம்ரூப்பில், நாளொன்றுக்கு 500 டன் மெத்தனாலை உற்பத்தி செய்யும் ஆலையை பிரதமர் திறந்து வைப்பார். இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு பிரிவுகளில் வழித்தடங்களின் அதிகரிப்பு, ரயில் பாதைகளின் மின்மயமாக்கல் உள்ளிட்ட ஐந்து ரயில்வே திட்டங்களையும் அவர் தொடங்கி வைப்பார்.

திகாரு- லும்டிங், கௌரிபுர்- அபயாபுரி ஆகிய பிரிவுகளின் துவக்கம்; புதிய போன்கெய்காவோன்- தூப் தாரா பிரிவு வழித்தடத்தின் இரட்டிப்பு; ராணி நகர் ஜல்பாய்குரி- குவஹாத்தி, சென்சோவா- சில்காட் நகரம் மற்றும் செஞ்சோவா- மைராபாரி ஆகிய பிரிவுகளில் ரயில் பாதைகளின் மின்மயமாக்கல் போன்ற ரயில்வே திட்டங்கள் இதில் அடங்கும்.

 

சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் வகையில் சிவசாகரில் உள்ள ரங் கர் கட்டிடத்தை எழில்படுத்தும் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதன்படி அஹோம் சாம்ராஜ்யத்தின் வரலாறு எடுத்துரைக்கப்படுவதுடன், பிரம்மாண்டமான நீர்வழித் தடத்தை சுற்றி செயற்கை நீரூற்று, சாகச படகு சவாரிகளுக்கு இறங்கு துறைகளுடன் கூடிய படகு குழாம், உள்ளூர் கைவினைப் பொருட்களை ஊக்குவிப்பதற்கு  கைவினைக் கலைஞர்கள் கிராமம் மற்றும் உணவு பிரியர்களுக்கு பலதரப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் போன்ற எண்ணற்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். சிவசாகரில் உள்ள ரங் கர், அஹோம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் சிறப்பு வாய்ந்த கட்டிடமாக விளங்குகிறது. கடந்த 18-வது நூற்றாண்டில் அஹோம் அரசர் ஸ்வர்கடியோ பரமட்டா சிங்காவால் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டது.

அசாம் மக்களின் கலாச்சார அடையாளமாகவும்,  வாழ்க்கையின் சின்னமாகவும் அசாமின் பிஹு நடனத்தை உலகளவில் வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான பிஹு நடன நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு ரசிப்பார். ஒரே வளாகத்தில் 10,000க்கும் மேற்பட்ட பிஹு நடனக் கலைஞர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி, உலகிலேயே மிகப்பெரிய பிஹு நடன நிகழ்ச்சி என்ற பிரிவில் புதிய கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சிக்கவுள்ளது. மாநிலத்தின் 31 மாவட்டங்களில் உள்ள கலைஞர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்வார்கள்.

***

AP/BR/KPG

 



(Release ID: 1915867) Visitor Counter : 172