குடியரசுத் தலைவர் செயலகம்
கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்
பழங்குடியின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியான வாழ்வுக்கான நெறிமுறைகளை மேம்படுத்த கௌஹாத்தி உயர்நீதிமன்றம் உதவியிருக்கிறது: குடியரசுத் தலைவர் முர்மு
Posted On:
07 APR 2023 7:01PM by PIB Chennai
கௌஹாத்தியில் இன்று (ஏப்ரல் 7, 2023) கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட 'போரோக்ஸா' என்ற மொபைல் செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.
கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் நீதித்துறையில் கௌஹாத்தி உயர் நீதிமன்றம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்றார். 1948 இல் தொடங்கப்பட்ட பிறகு, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ஏழு மாநிலங்களின் அதிகார வரம்பைக் கொண்டிருந்தது. இன்றும் நான்கு மாநிலங்களின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. பல சட்டப்பூர்வ தெளிவினை ஏற்படுத்துவதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளது. பல முக்கிய முடிவுகளை வழங்கியதற்காக கவனம் பெற்றுள்ளது. கௌஹாத்தி உயர் நீதிமன்றம் வரும் ஆண்டுகளிலும் இதே முறையில் மக்களுக்கு சேவை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வரலாற்று ரீதியாக பல்வேறு சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ்ந்தமைக்கு வடகிழக்கு பிராந்தியமே சிறந்த உதாரணம் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இதன் விளைவாக, அது வளமான இன மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. அத்தகைய பிராந்தியத்தில் நிறுவனங்கள் அதிக உணர்திறன் மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும். வெவ்வேறு பகுதிகளுக்குப் பொருந்தும் சட்டங்கள் மாறுபடலாம் ஆனால் முழுப் பகுதியும் பொதுவான உயர் நீதிமன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கௌஹாத்தி உயர்நீதிமன்றம் அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள வழக்காறான சட்டங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார். பழங்குடியின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தப் பிராந்தியத்தில் அமைதியான சகவாழ்வுக்கான நெறிமுறைகளை மேம்படுத்த இந்த நிறுவனம் உதவியுள்ளது.
சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர், சுற்றுச்சூழல் சீர்கேடு உலகெங்கிலும் உள்ள பல சமூகங்களுக்கு பெரும் அநீதிக்கு வழிவகுத்தது. மற்ற உயிரினங்கள் மற்றும் முழு சூழலியல் குறித்தும் நாம் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த மனிதகுலம் முன்னெப்போதும் இல்லாத சேதத்தை செய்துள்ளது. அதாவது இயற்கை அன்னையின் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு அநீதி இழைத்துள்ளது. சட்டப்பூர்வ சகோதரத்துவமும் அதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நீதி என்பது வரையறையின்படி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், எனவே அது அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இருப்பினும், நீதிக்கான அணுகல் பல காரணிகளால் தடுக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று நீதிக்கான செலவு ஆகும். இலவச சட்ட ஆலோசனையின் வரம்பை நாம் தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார். நீதியின் மொழி மற்றொரு தடையாக உள்ளது. ஆனால் அந்த திசையில் பாராட்டத்தக்க முன்னேற்றம் உள்ளது. நீதித்துறை மேலும் மேலும் பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நீதி நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் பங்கு நீண்ட காலமாக அமைப்பை பாதித்த பல பிரச்சனைகளை தீர்த்து வருகிறது என்றும் அவர் கூறினார். வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டக்கூடிய தொழில்நுட்ப தீர்வுகளை சட்ட களத்தில் கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
----
SM/JL/KPG
(Release ID: 1914723)