வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23-ம் ஆண்டில் அரசு இணைய சந்தையின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியதற்கு பியூஷ் கோயல் பாராட்டு

Posted On: 01 APR 2023 3:15PM by PIB Chennai

2022-2023 நிதியாண்டில், அரசு இணைய சந்தையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடித் தாண்டியுள்ளதாகவும், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் இன்று தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான எடுத்துக்காட்டே இந்த இணைய வழிச்சந்தை எனவும் அவர் தெரிவித்தார்.

 

நாட்டின் தொலைதூரத்தில் உள்ள மக்களின் பங்கேற்புடன், அரசுத் துறைகள் நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் இயங்க வேண்டும் என்றும், பெண் தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப்கள் மற்றும் எம்எஸ்எம்இ துறையினர் சமமான அளவில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 

"அரசின் இணைய சந்தை வேகமாக வளரும், அதன் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் அதிகமான விற்பனையாளர்கள் அரசின் இணைய சந்தையில் சேர வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அதனால் அவர்களும் அரசாங்க கொள்முதல் செயல்பாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்”, என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 

2017-ம் ஆண்டு அரசின் இணையச் சந்தை தொடங்கப்பட்டபோது, சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிற்கு வணிகம் செய்யப்பட்டதாகவும், இரண்டாவது ஆண்டில், இந்த மதிப்பு ரூ.5800 கோடியாக உயர்ந்ததாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். 5 ஆண்டுகளில் அரசின் இணையச் சந்தையின் வர்த்தக மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பது பிரதமரின் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.

 

அண்மையில் மும்பையில் நடைபெற்ற ஜி-20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழு கூட்டத்தில் நேர்மறையான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் வேகமாக வளர்ந்து வரும் புதிய இந்தியாவின் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைக்க, ஜி-20 தலைமைப் பொறுப்பு ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 

அரசின் இணைய வழிச்சந்தை (GeM)

 

அரசின் இணைய சந்தை (GeM) என்பது கொள்முதல் செய்வதற்கான பொது ஆன்லைன் தளமாகும். வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களுக்கிடையே நியாயமான மற்றும் போட்டித்தன்மையுடன் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தத் தளம் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம், சிறந்த தகவல் பகிர்வு, மேம்பட்ட வெளிப்படைத்தன்மை, குறைவான நேரம் மற்றும் ஏலதாரர்களிடையே அதிக நம்பிக்கை, அதிக சேமிப்பு காரணமாக, அரசின் இணைய வழிச் சந்தை விலைகளைக் கணிசமாகக் குறைத்து விற்பனையாளர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்துள்ளது. இது வணிகத்தை எளிதாக்கும் அதே வேளையில் இந்தியாவில் பொது கொள்முதலின் தரத்தை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

**********

AD/CR/DL


(Release ID: 1912890) Visitor Counter : 160