பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாதுகாப்பான எல்லைகள், முழுமையான வளர்ச்சி உள்ளிட்டவற்றுடன் வலுவான நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது: பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 30 MAR 2023 1:49PM by PIB Chennai

பாதுகாப்பான எல்லைகள் என்பதில் தொடங்கி பொருளாதார மேம்பாட்டுக்கு தற்சார்பு என்ற கொள்கை வரை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலுவான நாடாக வளர்ந்து வருகிறது என்றும் உலக அளவில் நாட்டின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தனியார் ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வளரும் இந்தியா, மாநாட்டில் இன்று (2023 மார்ச் 30) அவர் பங்கேற்று உரையாற்றினார்.  பாதுகாப்புத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் நாட்டில் கடந்த சில ஆண்டுகளில்  மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்புத்துறை தற்சார்பு அடைந்து வருவதுடன், அனைத்து சூழலுக்கும் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.  தேசப் பாதுகாப்பிற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளதாக கூறிய அவர், பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் விவரித்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்புத் தளவாடங்களின் ஏற்றுமதி  ரூ.900 கோடி என்ற அளவிலேயே இருந்தது என்று அவர் கூறினார். இந்த நிதியாண்டில், அவற்றின் ஏற்றுமதி ரூ.14,000 கோடியை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2026-ம் ஆண்டுக்குள் இந்த ஏற்றுமதியை ரூ. 40,000 கோடி அளவிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட பல சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார். ஜி20 இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் மேலும் உயர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார்.  தீவிரவாதம் உள்ளிட்ட சவால்களையும் இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதுமே சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது இந்த அரசு வலுவான அரசு என்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் அவர் கூறினார். இதன் மூலம், அந்த யூனியன் பிரதேசத்தில் அமைதியும், வளர்ச்சியும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரசின் நடவடிக்கைகளின் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளதாகவும், அங்கு பெரும்பாலான பகுதிகளில்  ஆயுதப்படை சிறப்பு சட்டம், திரும்ப பெறப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்க்கையை எளிதாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலவச எரிவாயு இணைப்புத்திட்டம்,  ஜல்ஜீவன்  இயக்கத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றால் மக்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

புதிய இந்தியாவில் உயர்வு-தாழ்வு மனப்பான்மைகளுக்கு இடமில்லை என்று  அவர் தெரிவித்தார். 140 கோடி இந்தியர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் அரசு செயல்படுவதாக அவர் கூறினார். மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றுவதன் மூலமே வலுவான மற்றும் வளமான இந்தியா என்ற கனவை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

***

AD/PLM/RS/KRS

 


(Release ID: 1912242) Visitor Counter : 142