தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

வேளாண் துறையில் அதிகளவிலான பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு இருப்பதாக 2021-22 வருடாந்திர தொழிலாளர் படை ஆய்வறிக்கையில் தகவல்

Posted On: 27 MAR 2023 3:52PM by PIB Chennai

வேளாண் துறையில் அதிகளவிலான பெண் பணியாளர்களின் பங்களிப்பு இருப்பதாக 2021-22 வருடாந்திர தொழிலாளர் படை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேளாண் துறை சார்ந்த பணிகளில் 62.9 சதவீதம் பெண்கள் பணியாற்றுகிறார்கள். இதே  போல் உற்பத்தித் துறையில் பணியாற்றுபவர்களில் 11.2 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். வணிகம், உணவு விடுதிகளில் பணியாற்றுபவர்களில் 5.9 சதவீதம்  பேர் பெண்கள். மற்ற சேவை சார்ந்த துறைகளில் 13.6 சதவீதம் பெண்கள் பணியாற்றுகிறார்கள்.

தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருவதுடன், தரமான  வேலைவாய்ப்பை உருவாக்கவும், முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்கு சமமான   வேலைவாய்ப்பை வழங்குவதுடன், பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கவும், தொழிலாளர் சட்டங்களில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக மகப்பேறு விடுப்பாக 12 முதல் 26 வாரங்கள் வரை வழங்கப்படுதல், 50 மற்றும் அதற்கும் மேற்பட்ட பெண்  தொழிலாளர்கள் பணியாற்றும் இடத்தில், அவர்களது 3 வயதிற்குட்பட்ட  குழந்தைகளை கட்டாயம்  பராமரிக்கும் வசதி, போதிய பாதுகாப்பு வசதிகளுடன் இரவு பணிகளில் பெண்களை ஈடுபடுத்துதல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பெண் பணியாளர்களின் பணி சார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்காக மகளிர்  தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள், தேசிய மற்றும் மண்டல அளவிலான தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக பயிற்சிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

அரசுத் துறைகளில் பெண் பணியாளர்களின் பங்களிப்பு குறித்த 2021-22 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தொழிலாளர் படை ஆய்வறிக்கையில், 15 வயதிற்கு மேற்பட்டோர் பெண்களின் பங்களிப்பு அதிகபட்சமாக 19. 1 சதவீதத்துடன் ஹரியானா மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

AD/ES/RS/KRS(Release ID: 1911232) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Marathi