ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நியூயார்க்கில் நடந்த ஐ.நா. தண்ணீர் மாநாட்டில் நமாமி கங்கை பற்றிய குழு விவாதத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் உரை

Posted On: 25 MAR 2023 2:52PM by PIB Chennai

2023-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதியன்று நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற 2023 ஐ.நா தண்ணீர் மாநாட்டில், 'நமாமி கங்கே - கங்கை நதி மற்றும் அதன் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மற்றும் புத்துயிர் பெறுவதற்கான ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறை' என்ற குழு விவாதத்தில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் சிறப்புரை ஆற்றினார்.

 

தலைமை உரை ஆற்றிய திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், “கங்கைக் கரையிலுள்ள நகரங்களில் தூய்மை கங்கை இயக்கம் ஒரு வலுவான கழிவுநீர் சுத்திகரிப்பு உட்கட்டமைப்பை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாகவும், இதன் விளைவாக நீரின் தரம் மேம்பட்டு பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

இந்தியா நீர் மேலாண்மையில் 240 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டுள்ளது என்றும், உலகின் மிகப்பெரிய அணை மறுசீரமைப்புத் திட்டத்தையும், நாட்டின் நிலத்தடி நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளையும் செயல்படுத்தி வருவதாகவும் திரு.ஷெகாவத் கூறினார். தூய்மை கங்கை திட்டத்தை வெற்றியடையச் செய்வதில் பொதுமக்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், லட்சக்கணக்கான மக்கள் ஆற்றின் சுற்றுச்சூழலுடன் தொடர்புகொள்வதன் மூலம், நதி தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வில் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

2020-ம் ஆண்டில், இந்தியாவும் டென்மார்க்கும் இணைந்து அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, சுத்தமான தண்ணீரை உறுதி செய்வதற்கான மூலோபாய கூட்டாண்மையை உருவாக்கியது என்றும் அவர் கூறினார்.

தண்ணீரை நிர்வகிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும், கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா ஏற்றுக்கொண்ட முக்கிய கொள்கைகள் குறித்த "சிற்றலைகள்: இந்தியாவின் நிலையான நீர் மேலாண்மை கதை" என்ற தலைப்பிலான புத்தகம் இந்த அமர்வின் போது வெளியிடப்பட்டது.

டென்மார்க் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எச்.இ.மேக்னஸ் ஹியூனிக், தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் இயக்குநர் ஜெனரல் திரு.ஜி.அசோக் குமார், நெதர்லாந்தின் சிறப்பு நீர் தூதர் ஹென்க் ஓவிங்க் உள்ளிட்ட பலர் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.

***

AD/CR/DL


(Release ID: 1910805) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Hindi