பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள்
Posted On:
17 MAR 2023 4:20PM by PIB Chennai
குழந்தைத் திருமணங்களை தடுக்கவும், அது தொடர்பான சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை விதிக்கவும், குழந்தைத் திருமணத் தடுப்புச்சட்டம் 2006-ஐ அரசு கொண்டுவந்துள்ளது. இந்தச்சட்டத்தின் 16-வது பிரிவின்படி மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்ட அதிகாரிகளை நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளதுடன், அந்த அதிகாரிகளுக்கான கடமைகளும் அந்த சட்டத்தில் 16-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணத்தை தடுப்பது தொடர்பான, நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பொறுப்பு மாநில அரசுகள் வசமே உள்ளது. குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்காக மத்திய அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் “பெண் குழந்தைகளைக் காப்போம்-பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் பாலின சமுத்துவத்தை ஏற்படுத்துவதிலும், குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
குழந்தைத் திருமணம் தொடர்பான புகார்களை 1098 என்ற தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம். தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்களின்படி, 2021-ம் ஆண்டில் குழந்தைத் திருமணம் தொடர்பாக 1050 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, குழந்தைத் திருமணத் தடுப்புத் திருத்தச்சட்ட மசோதா 2021-ஐ மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா ஆணுக்கு நிகராக பெண்ணின் திருமண வயதையும் 21-ஆக அதிகரிக்க வகை செய்கிறது.
இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிர்தி இரானி தெரிவித்துள்ளார்.
***
SRI/PLM/RS/KRS
(Release ID: 1908065)
Visitor Counter : 208