மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சேல்ஸ் ஃபோர்ஸ் மற்றும் ட்ரூகாலர் நிறுவனங்களின் இந்திய அலுவலகங்களைத் திறந்து வைத்தார் மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்
Posted On:
16 MAR 2023 7:17PM by PIB Chennai
எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது தொடர்பான திரு நரேந்திர மோடி அரசின் கொள்கைகள், புதிய இந்தியாவின் உற்பத்தி மற்றும் புத்தொழில் சூழலியலுக்கு உதவியுள்ளதோடு உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவனங்களைத் தொடங்க ஊக்குவிக்கிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும், தொழில்முனைவு வாய்ப்புகளும் ஏற்படும் என்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் சேல்ஸ் ஃபோர்ஸ் மற்றும் ட்ரூகாலர் நிறுவனங்களின் இந்திய அலுவலகங்களை அமைச்சர் புதுதில்லியில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்துப் பேசினார். கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இந்திய வளர்ச்சிப் பாதையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல அவர் திட்டமிட்டதோடு, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் டிஜிட்டல் சேனல்கள் குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கவும் வழிவகை செய்தார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
2014-ஆம் ஆண்டில் ஒற்றை பரிமாண டிஜிட்டல் பொருளாதாரமாக இருந்து வந்த இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், தற்போது மிகுதியான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார் அவர். உலகின் திறன் மையமாக இந்தியாவை மாற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர், நாட்டில் திறன் மற்றும் திறமையை மேம்படுத்துவதற்காக தொழில்துறை, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1907735
***
(Release ID: 1907903)