சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய வனப்பரப்பு நிலை அறிக்கை 2021ன் படி நாட்டின் மொத்த வனம் மற்றும் மரங்களின் பரப்பு 2261 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது

Posted On: 13 MAR 2023 4:16PM by PIB Chennai

இந்திய வனப்பரப்பு நிலை அறிக்கை 2021ன் படி நாட்டின் மொத்த வனம் மற்றும் மரங்களின் பரப்பு 2261 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது. டேராடூனில் உள்ள இந்திய காடுகள் கணக்கெடுப்பு அமைப்பு 1987ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கணக்கெடுப்பை நடத்தி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 2021ம் ஆண்டு ஆய்வின்படி நாட்டில் மொத்த வனப்பரப்பு 7,13,789 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 21.72% ஆகும். 2019ம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடுகையில் காடுகளின் பரப்பளவு 1540 சதுர கிலோ மீட்டரும், மரங்களின் பரப்பளவு 721 சதுர கிலோ மீட்டரும் அதிகரித்துள்ளது. தேசிய அளவில் 2 ஆண்டுகளில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு மொத்தம் 2261 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது.

காடுகளின் பரப்பளவு மற்றும் பசுமை பரப்பளவை அதிகரிக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வருவதுடன் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தேசிய மூங்கில் இயக்கம், வேளாண் காடுகளுக்கான துணை இயக்கம் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் காடுகள் மரங்களின் பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மூலமாகவும், அரசுசார அமைப்புகள் மூலமாகவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாகவும் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிப்பதில் நல்ல பலனைத் தந்துள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1,30,060 சதுர கிலோ மீட்டராகவும், இதில் காடுகளின் பரப்பளவு 26,419 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது. மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் இது 20.31% ஆகும். 2019 ஆண்டை ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டில் மாநிலத்தின் வனப் பரப்பு 0.21% அதிகரித்துள்ளது.

இந்த தகவலை மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.

***

AP/PLM/SG/KPG


(Release ID: 1906508) Visitor Counter : 395


Read this release in: English , Urdu , Marathi , Manipuri