பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி கப்பற்படை சிறார்கள் பள்ளியில் கேப்டன் மகேந்திர நாத் முல்லா எம்விசி நினைவுக் கோப்பை வழங்க ஏற்பாடு

Posted On: 12 MAR 2023 3:57PM by PIB Chennai

மஹா வீர் சக்ரா (எம்விசி) விருது பெற்ற மறைந்த கேப்டன் மகேந்திர நாத் முல்லாவின் மகள்களான திருமதி அமீதா முல்லா வட்டால் மற்றும் திருமதி அஞ்சலி கவுல் ஆகியோர் தங்கள் தந்தையின் நினைவாக கோப்பை ஒன்றை வழங்கும் ஏற்பாட்டை தில்லியில் உள்ள கப்பற்படை சிறார்கள் பள்ளியில் 2023,மார்ச் 11 அன்று மேற்கொண்டனர். இதற்காகப் பள்ளியில் நடைபெற்ற ஒரு சுருக்கமான விழாவில், வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி, பணியாளர் சேவைகள் கட்டுப்பாட்டாளர் மற்றும்  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், கமோடர் ஜி.  ராம்பாபு, கமோடர் (கப்பற்படை கல்வி) & பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர், கர்னல் சஞ்சீவ் வட்டால் ஆகியோரும் பள்ளியின் ஒருசில பணியாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் நிதியும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த விருது ‘சிறந்த மாணவருக்கான கேப்டன் எம்.என்.முல்லா, எம்விசி நினைவு விருது’ எனப்  பெயரிடப்பட்டுள்ளது. தெளிவான கண்ணோட்டம், உறுதியான துணிவு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தில்லி கப்பற்படை சிறார்கள் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு இவ்விருது(ஒரு ஆண், ஒரு பெண்) வழங்கப்படும்.

1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, 1971, டிசம்பர் 09 இரவில்  எதிரி நீர்மூழ்கிக் கப்பலால் சுடப்பட்ட டார்பிடோ குண்டுகளால் ஐஎன்எஸ்  குக்ரி தாக்கப்பட்டு மூழ்கியது. கப்பலைக்  கைவிட முடிவு செய்த கேப்டன் முல்லா, தனது சொந்த பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், தனது கப்பலில் இருந்த வீரர்களை  மீட்பதற்கான ஏற்பாடுகளைப் பதற்றமின்றியும், மிகவும் அமைதியாகவும், முறையாகவும் மேற்பார்வையிட்டார். இயன்றவரை கப்பலை விட்டு வெளியேற  வீரர்களை வழிநடத்திய பின்னர், கேப்டன் முல்லா மீண்டும் பாலத்திற்குச் சென்று இன்னும் என்னென்ன மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று பார்வையிட்டார்.  அவ்வாறு செய்யும்போது, கேப்டன் முல்லா கடைசியாக தனது கப்பலுடன் மூழ்குவதை உணர்ந்தார்.  அவரது செயல்கள், நடத்தை மற்றும் அவர் வகுத்த செயல்முறைகள் முன்மாதிரியாக, ராணுவத்தின் உயர்ந்த மரபுகளுக்கு ஏற்ப உள்ளது. கேப்டன் மகேந்திர நாத் முல்லா, உயர்வான துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார். அவருக்கு மஹா  வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

 

***

SRI/SMB/DL


(Release ID: 1906184) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Hindi