மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஐஐடி மெட்ராஸ்-ன் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் நான்காண்டு இளங்கலை அறிவியல் படிப்பைத் தொடங்கி வைத்தார் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான்
Posted On:
06 MAR 2023 4:23PM by PIB Chennai
மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்), எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் (மின்னணு அமைப்பியல்) (https://study.iitm.ac.in/es/) நான்காண்டு ஆன்லைன் இளங்கலை அறிவியல் (BS) பட்டப்படிப்பைத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் மின்னணு மற்றும் வடிவமைக்கப்பட்ட சாதன உற்பத்தித் துறையில், திறமையான பட்டதாரிகளுக்கான குறிப்பிடத்தக்க மற்றும் வளர்ந்துவரும் தேவையை பூர்த்தி செய்வதுதான் இந்த பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாணவர்கள் அடிப்படை நிலை சான்றிதழ், டிப்ளமோ அல்லது பி.எஸ். பட்டத்தைப் பெறும் வகையில் பல்வேறு கட்டங்களில் வெளியேற ஏதுவாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்னணு உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் இந்தியாவை உலகளாவிய மையமாக உருவாக்குவதற்கான இந்தியா செமிகண்டக்டர் மிஷன்-உடன் இந்தப் பாடத்திட்டம் இணைந்து செயல்படுகிறது. இது ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ள இரண்டாவது பி.எஸ். பட்டப்படிப்புத் திட்டமாகும். ஏற்கனவே டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் பி.எஸ். பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு 17,000-க்கும் அதிகமான மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்.
மத்திய அரசின் கல்வித்துறை செயலாளர் திரு. சஞ்சய் மூர்த்தி (காணொலியில் பங்கேற்பு), ஐஐடி மெட்ராஸ் நிர்வாகக் குழுத் தலைவர் டாக்டர் பவன் கே.கோயங்கா (காணொலியில் பங்கேற்பு), ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி மெட்ராஸ் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பி.எஸ். பட்டப்படிப்பு இன்று (6 மார்ச் 2023) தொடங்கி வைக்கப்பட்டது.
அனைவரும் அணுகக்கூடியதாக ஐஐடி கல்வியை மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்துடன், பி.எஸ். படிப்பிற்கு குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இருப்பதை உறுதிசெய்யும் வகையில் எஸ்சி/எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் உடையவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகையும் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், “கடந்த சில ஆண்டுகளாக பி.எஸ். டேட்டா சயின்ஸ் படிப்பை வெற்றிகரமாக நடத்தி வரும் ஐஐடி மெட்ராஸ், மற்றொரு முத்தாய்ப்பாக பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்தைத் தொடங்கி உள்ளது. இதற்காக இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடியின் தலைமையில் இயங்கும் ஐஐடி மெட்ராஸ் குழுவினரைப் பாராட்டுகிறேன். இதுதான் 2020-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த சரியான அணுகுமுறையாகும். தேசிய கல்விக் கொள்கையின் அனைத்து பரிந்துரைகளும் குறிப்பாக இதன் நெகிழ்வுத்தன்மை, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, கல்வி ஒருங்கிணைப்பு ஆகிய அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பில் பலகட்ட நுழைவு மற்றும் வெளியேறும் நிலைகள் இருப்பதுடன், தரம், அணுகுமுறை உள்ளிட்ட இந்திய உயர்கல்விக்கான அனைத்து சிறப்புகளும் உள்ளன” என்றார்.
திரு. தர்மேந்திர பிரதான் மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி அவர்களின் தெளிவான வழிகாட்டுதலின் படி கூட்டு முயற்சியாக புதிய வடிவமைப்பை உருவாக்கி வருகிறோம். இந்தியா தற்போது சாமானியர்களுக்கான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பில் உலகளவில் முன்னணியில் இருந்து வருகிறது. பணம் செலுத்துதல், அன்றாட வசதிகள், போக்குவரத்து, வேளாண்மை உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவைகளிலும் நாம் புதிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளோம்" என்றார்
மேலும் திரு. தர்மேந்திர பிரதான் கூறும்போது, “இந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கு உலகளாவில் முக்கிய இடமாமாக்க பிஎல்ஐ (உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டம்) போன்ற முன்முயற்சிகளுடன் நல்ல கொள்கைச் சீர்திருத்தங்களையும் இந்தியா ஏற்படுத்தி வருகிறது. ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் எப்போதும் காலத்தே முன்னோக்கிச் செயல்படுபவர் என்பதை பெருமையோடும், மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான பட்ஜெட், இந்த டிஜிட்டல் சுற்றுச்சூழலுக்கான அரசின் உறுதிப்பாட்டின் ஒரு அறிகுறியாகக் கொள்ளலாம். பிற முன்னணி கல்வி நிறுவனங்களும், தொழில்துறையினரும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு அளவுகோலாக இந்த பாடத்திட்டம் அமைவது உறுதி” எனக் குறிப்பிட்டார்.
இந்த பாடத்திட்டத்தில் பட்டம் பெறும் மாணவர்கள் மோட்டார் வாகனங்கள், செமிகண்டக்டர், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் கீழ்க்காணும் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்:
எலக்ட்ரானிக் சிஸ்டர் டிசைனர்
எம்பெடட் சிஸ்டம் டெவலப்பர்
எலக்ட்ரானிக் ஹார்டுவேர் ஸ்பெஷலிஸ்ட்
சிஸ்டம் டெஸ்டிங் இன்ஜினியர்
எலக்ட்ரானிக்ஸ் ரிசர்ச் இன்ஜினியர்
பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களில் உயர்கல்வியையும் தொடர முடியும்.
இப் பாடத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களை பின்வரும் இணையதள முகவரியில் காணலாம்- https://study.iitm.ac.in/es/
***
AP/IR/RJ/RR
(Release ID: 1904578)
Visitor Counter : 210