வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 25 FEB 2023 3:04PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் புனேவில் நடைபெற்ற ஆசிய பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றுப் பேசினார்.

இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் நமது பொருளாதாரத்தை 35 முதல் 40 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருப்பது மட்டுமல்லாமல் இன்னும் பல ஆண்டுகளுக்கு இது தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தியா ஏற்கெனவே பத்தாவது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இன்று இந்தியாவிடம் இளைஞர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது எனவும் இது மிகப்பெரிய பலமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில், ரஷ்யா - உக்ரைன் மோதல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இரண்டிலுமே பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே இந்த ஒப்பந்தம் 88 நாட்களில் விரைவாக கையெழுத்தானது என்றார். அதே போல ஆஸ்திரேலியாவுடனும் குறுகிய காலப் பேச்சுவார்த்தையில் விரைவான முறையில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக அவர் கூறினார். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் உலக நாடுகள் உற்சாகம் காட்டுவதாக அவர் தெரிவித்தார். இஸ்ரேல், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனும் ஐரோப்பிய யூனியனுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சு நடத்தி வருவதாக அவர் கூறினார்.

பசுமைத் தொழில்களை ஊக்குவிப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை  பொறுப்பான முறையில் எதிர்கொள்வதில் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது என்றார். கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில் சுழற்சிப் பொருளாதாரத்தை அரசு ஊக்கப்படுத்துவதாக அவர் கூறினார். பருவநிலை மாற்ற இலக்குகளை அடைவதில் முன்னணியில் உள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், உலகப் பொருளாதாரத்திற்கு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றார். எனவே, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் மிக முக்கிய சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தொழில்துறையினரிடம் தெரிவித்தார்.  இந்தியாவில் உள்ள இளைஞர்களின் ஆற்றல், நாட்டின் பொருளாதாரத்தை, 2047-ம் ஆண்டுக்குள், 47 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற உதவும் என்று திரு. பியூஷ் கோயல் கூறினார்.

***

SRI / PLM / DL


(Release ID: 1902358) Visitor Counter : 364


Read this release in: English , Urdu , Hindi , Marathi