சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் போட்டித்தன்மைக்கான அமைப்பின் ஆய்வுக் கட்டுரையை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்

Posted On: 24 FEB 2023 11:32AM by PIB Chennai

“கொவிட் 19, பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஜனவரி 2020-இல் பெருந்தொற்று மேலாண்மையின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துவதற்கான நடைமுறைகள் துவங்கப்பட்டன. இந்தியாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கொவிட் 19இன் சிறப்பான மேலாண்மைக்காக 'ஒட்டுமொத்த அரசு’ & 'ஒட்டுமொத்த சமூகம்’ என்ற அணுகுமுறையை ஆக்கப்பூர்வமாக பின்பற்றி முழுமையான எதிர்ப்பு உத்தி மேற்கொள்ளப்பட்டது”, என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார். தடுப்பூசி மற்றும் அது சம்பந்தமான விஷயங்களில் பொருளாதார தாக்கங்கள் தொடர்பான ‘இந்திய ஆலோசனை' அமர்வில் காணொலி வாயிலாக இன்று கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். போட்டித்தன்மைக்கான அமைப்பு மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க- ஆசிய தொழில்நுட்ப மேலாண்மை மையம் ஆகியவை இணைந்து இந்த அமர்விற்கு ஏற்பாடு செய்திருந்தன.

“பொருளாதாரத்தை சீர்படுத்துதல்: இந்தியாவில் தடுப்பூசி மற்றும் சம்பந்தமான விஷயங்களின் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுதல்” என்ற தலைப்பில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், போட்டித்தன்மைக்கான அமைப்பும் உருவாக்கிய ஆய்வுக் கட்டுரையை அமைச்சர் வெளியிட்டார்.  கொவிட் 19 தடுப்பூசி திட்டத்தை இதுவரை இல்லாத அளவில் மிக பிரம்மாண்டமாக நாடு முழுவதும் மேற்கொண்டு, இந்தியா 3.4 மில்லியன் உயிர்களை பாதுகாத்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 பிரச்சாரத் திட்டத்தினால் நேர்மறையான பொருளாதார தாக்கம் ஏற்பட்டதோடு 18.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் அடைவதில் இருந்து தடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “சிறப்பு மையங்களின் வாயிலாகவும், தொலை மருத்துவ சேவை, ஆரோக்கிய சேது, கொவிட் 19 இந்தியா தளம் போன்ற டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தியும் மனித வளத்தை மேம்படுத்தியதோடு, படுக்கைகள், மருந்துகள், உபகரணப் பொருட்கள், மருத்துவ பிராணவாயு போன்ற சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தியது”, என்று கூறினார்.

உலகின் பிரம்மாண்ட தடுப்பூசித்  திட்டத்தை இந்தியா தொடங்கி அதன் மூலம் 97% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 90% பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் தகுதி வாய்ந்தவர்களுக்கு 2.2 பில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக டாக்டர் மாண்டவியா கூறினார். “மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான பங்குதாரர்களிடையே தொடர் ஒருங்கிணைப்பின் காரணமாக கொவிட் 19 பெருந்தொற்றின் தீவிர பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், பொருளாதார நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்பட்டன”, என்று அவர் தெரிவித்தார்.

***

 (Release ID: 1901914)

AP/RB/KRS(Release ID: 1902040) Visitor Counter : 188