ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மகளிரை அதிகாரமிக்கவர்களாக மாற்றும் வகையில், , சுய உதவிக் குழுக்களுக்கான வங்கியை அமைப்பது குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது: மத்திய அமைச்சர் திரு.கிரிராஜ் சிங்

Posted On: 18 FEB 2023 6:37PM by PIB Chennai

பெண்களின் புத்தாக்க முயற்சிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நிதி அளித்து, மகளிரை அதிகாரமிக்கவர்களாக மாற்ற ஏதுவாக, சுய உதவிக் குழுக்களுக்கான வங்கியை அமைப்பது குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருதாகக் அத்துறைக்கான அமைச்சர்  திரு.கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில்  தயாரிக்கப்பட்டப் பொருட்களுக்கான கண்காட்சியான சாராஸ் அஜீவிகா மேளா 2023 நொய்டாவில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் நாடு முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 9 கோடி  உறுப்பினர்கள்,  மாதம் தலா 100 ரூபாயையை சேமிக்க முன்வந்தாலே அதிகபட்ச டெபாசிட் செய்யப்படும்  மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வங்கியை அமைக்க உதவும் என்றார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், உணவு வகைகள் உள்ளிட்டவற்றை நாட்டு மக்கள் அனைவரும்  வாங்கிப் பயனடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம் என்றார்.

இந்தக் கண்காட்சியில், 27 மாநிலங்களைச் சேர்ந்த 350 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், 180 அரங்குகளை அமைத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய  அவர், 2024ம் ஆண்டிற்குள் 10 கோடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உறுப்பினர்களை உருவாக்குவதே பிரதமர் மோடியின் இலக்கு  எனவும் தெரிவித்தார்.

கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்தக் கடன் தொகை ரூ.80,000 கோடியாக இருந்ததாகவும், அந்தத் தொகை தற்போது ரூ.6.25லட்சம் கோடியாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம்  ஒவ்வொரு பெண்ணும், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சேமிக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை என்ற அவர், இதன்மூலம், இன்னும் சில ஆண்டுகளில் 10 லட்சம்  லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை மின்னணு வர்த்தக நிறுவனங்களான ஜெம், ஃப்ளிப்கார்ட், அமேசான்  உள்ளிட்டவற்றில்  சிரமமின்றி விற்பனை செய்ய  முடியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் திரு. பகன் சிங் குலஸ்தே,   சுயஉதவிக் குழுக்களின் சாராஸ் விற்பனை அரங்குகளை  அனைத்து மாநிலங்களின் முக்கிய நகரங்களின்  மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அமைக்க, ஊரகவளர்ச்சித்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

 

இந்தக் கண்காட்சியில், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் திரு. சைலேஷ் சிங், கூடுதல் செயலாளர் திரு. சரண்ஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

***

AP  / ES  / DL



(Release ID: 1900402) Visitor Counter : 144


Read this release in: English , Urdu , Marathi