குடியரசுத் தலைவர் செயலகம்

கட்டாக்கில் 2வது இந்திய அரிசிக் காங்கிரசைக் குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்தார்

Posted On: 11 FEB 2023 3:38PM by PIB Chennai

இந்திய உணவுப் பாதுகாப்புக்கு முக்கியமானதாக இருக்கும் அரிசி, நமது பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். கட்டாக்கில் உள்ள ஐசிஏஆர் - தேசிய அரிசி ஆராய்ச்சிக் கழகத்தில் 2வது இந்திய அரிசிக்  காங்கிரசை இன்று (பிப்ரவரி 11, 2023) தொடங்கிவைத்து அவர் உரையாற்றினார்.

 

இந்தியா இன்று அரிசியின் முன்னணி நுகர்வோராகவும் ஏற்றுமதியாளராகவும் உள்ளபோதும் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நிலைமை வேறாக இருந்தது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

அந்தச் சார்புத்தன்மையிலிருந்து நாடு மீண்டு, மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாற முடிந்துள்ளதென்றால் அந்தப் பெருமை தேசிய அரிசி ஆராய்ச்சிக் கழகத்தையே சாரும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் கூட இந்த நிறுவனம் பங்களிப்பு செய்துள்ளது.

 

சிஆர் தான் 310 எனப்படும் இந்தியாவின் முதலாவது உயர் புரத அரிசியை ஐசிஏஆர் - என்ஆர்ஆர்ஐ உருவாக்கியிருப்பதற்கும் சிஆர் தான் 315 எனப்படும் உயர்தர ஸிங்க் அரிசி ரகத்தை என்ஆர்ஆர்ஐ வெளியிட்டிருப்பதற்கும் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்திற்கிடையே அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு உதவியாக இதுபோன்ற முயற்சிகள் மேலும் மேலும் தேவைப்படுகிறது. இந்த சவாலை இந்திய அறிவியல் சமூகம் எதிர்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

***

SMB / DL



(Release ID: 1898348) Visitor Counter : 114