கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கலை, கலாச்சாரம் மற்றும் இசை சார்ந்த படைப்பாற்றலில் ஒற்றுமை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய கலாச்சாரத் துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன

Posted On: 06 FEB 2023 2:50PM by PIB Chennai

மத்திய கலாச்சாரத் துறை சார்பில், கலை, கலாச்சாரம் மற்றும் இசை சார்ந்த படைப்பாற்றலில் ஒற்றுமை என்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி, புதுதில்லியில் உள்ள நேரு பூங்காவில் பிப்ரவரி 5-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

     இந்த நிகழ்ச்சியில் மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மெஹ்வால், வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி ஆகியோர் பங்கேற்றனர்.

     நிகழ்ச்சியில் பேசிய திருமதி மீனாட்சி லேகி, நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக இந்தப் போட்டிகளை கலாச்சாரத்துறை திறம்பட நடத்தி இருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சாரமும், பாரம்பரியமும் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பதற்கு கதை சொல்லுதல் மூலம் ஒவ்வொரு தலைமுறைக்கும் அவற்றை எடுத்துச் சென்றதே காரணம் எனக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு வென்ற அனைவருக்கும் திரு.அர்ஜுன் ராம் மெஹ்வால் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 2021 அக்டோபர் 31-ம் தேதி தொடங்கிய இந்த படைப்பாற்றலில் ஒற்றுமை என்றப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள 600 மாவட்டங்களிலிருந்து மொத்தம் 5,60,000 பேர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துகொண்டு பங்கேற்றனர். இது 20 மொழிகளில் கதை சொல்லும் போட்டியும், 21 மொழிகளில் கட்டுரை போட்டியும் நடத்தப்பட்டது. சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரங்கோலி போட்டியிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த அனைத்து போட்டிகளும் மாவட்ட, மாநில, தேசிய என மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டு ஒட்டுமொத்தமாக 4,760 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பரிசளிப்பு விழாவில் குஜராத், மிசோரம், தெலங்கானா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் இசை, மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. 

******

 

AP/ES/UM/RR

 


(Release ID: 1896630) Visitor Counter : 228