ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள்

இடுகை இடப்பட்ட நாள்: 02 FEB 2023 3:47PM by PIB Chennai

2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பமும் குழாய் இணைப்பு மூலம் குடிநீரைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, 2019 ஆகஸ்ட் முதல், ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.

ஜல் ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், 3.23 கோடி (17%) கிராமப்புறக் குடும்பங்கள் குழாய் இணைப்புகளை பெற்றிருந்தன. இதுவரை, 7.81 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 30.01.2023 நிலவரப்படி, நாட்டில் உள்ள 19.36 கோடி கிராமப்புறக் குடும்பங்களில், சுமார் 11.05 கோடி (57%) குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் இணைப்பு வசதி  பெற்றுள்ளன.

ஜல்ஜீவன் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. மாநாடுகள், பயிலரங்குகள், காணொலி மாநாடுகள், மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அத்துடன் ஒழுங்குமுறைக் குழுக்களின் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் மாநிலங்கள் திட்டமிட்டு இலக்கை அடைய அறிவுறுத்தப்படுகின்றன.

ஜல்ஜீவன் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆன்லைன் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு , தகவல் பலகைகள் வைக்கப்பட்டு, ஊராட்சி அளவில் பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் பொதுத்தளத்தில் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் நிதி மேலாண்மைக்கான பொது நிதி மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.

***

PKV/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1895753) வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu