அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தங்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டும் ஸ்டார்ட்-அப் வாய்ப்புகளை ஏற்கும் வகையில் இளைஞர்களின் மனநிலையை மாற்ற மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
28 JAN 2023 4:40PM by PIB Chennai
தங்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டும் ஸ்டார்ட்-அப் வாய்ப்புகளை ஏற்கும் வகையில் இளைஞர்களின் மனநிலையை மாற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்துவாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சிஎஸ்ஐஆர் ஏற்பாடு செய்திருந்த “இளம் ஸ்டார்ட்-அப் மாநாட்டை” தொடங்கி வைத்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், அரசு வேலை மனப்பான்மை குறிப்பாக வட இந்தியாவில் ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்திற்குத் தடையாக உள்ளது என்றார்.
ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவதற்காக வேலையை விட்டு விலகிய இரண்டு பி-டெக் மற்றும் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் உட்பட தங்களின் அனுபவங்களை விவரித்த நான்கு இளைஞர்களின் வெற்றிக் கதைகளைக் குறிப்பிட்டுப் பேசிய, டாக்டர் ஜிதேந்திர சிங், சிஎஸ்ஐஆர் மூலம் தாம் முன்னெடுத்த "ஊதாப் புரட்சி" குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ஒரு பகுதியாக மாறியதையும் இது நாடு தழுவிய அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றதையும் சுட்டிக்காட்டினார்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து உருவான ‘ஊதாப் புரட்சி’ கவர்ச்சிகரமான ஸ்டார்ட்-அப் வழிகளைத் திறந்துள்ளது என்பதையும் ஊதாநிறப் பூவின் நமணப்பொருள் துறையில் நுழைந்தவர்கள் அதன் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டுகிறார்கள் என்பதையும் டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். பல இளம் தொழில்முனைவோர் தங்கள் சொந்த ஸ்டார்ட்-அப்களை நிறுவுவதற்காக லாபகரமான பன்னாட்டு நிறுவன வேலைகளை விட்டு வெளியேறுவதைக் காணுகின்ற சில முன்மாதிரியான நிகழ்வுகளை கவனத்தில் கொள்வது அவசியம் என்று அவர் கூறினார். இதில் மகத்தான வாய்ப்புகள் இருப்பதை இந்த இளம் தொழில்முனைவோர் உணரத் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட வழங்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மற்றும் பல மலைப் பிரதேசங்கள், இமயமலை மாநிலங்கள் அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரு குறிப்பிடத்தக்க மதிப்புக் கூடுதலை உருவாக்க உள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி இந்த துறைகளில் கவனம் செலுத்தி வருவதால், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலக பீடத்தில் அமர்த்துவதில் இவை முக்கியப் பங்காற்றப் போகின்றன என்றார் அவர்.
முன்னதாக,ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த தொழில்முனைவோர்களால் அமைக்கப்பட்ட ஸ்டார்ட்அப் அரங்குகளையும், கத்துவாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களால் அமைக்கப்பட்ட மாதிரிகளையும் டாக்டர் சிங் பார்வையிட்டார்.
இந்த மாநாட்டில் புகழ்பெற்ற தொழில்முனைவோர், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், முன்னணி முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வளர்ச்சிக்கு உதவுவோர் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் போது, தங்களின் வெற்றிக் கதைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட உள்ளூர் முன்னணி விவசாயிகள், சரியான முறையில் கைதூக்கிவிடுதல் மற்றும் தங்களின் முயற்சிகளில் கணிசமான ஆதரவின் மூலம் அதைச் சாத்தியப்படுத்தியதற்கு சிஎஸ்ஐஆர்-க்கு நன்றி தெரிவித்தனர்.
*****
SMB / DL
(Release ID: 1894331)
Visitor Counter : 207