தேர்தல் ஆணையம்
13 ஆவது தேசிய வாக்காளர் தினம் நாடுமுழுவதும் கொண்டாட்டம்
Posted On:
25 JAN 2023 5:02PM by PIB Chennai
13 ஆவது தேசிய வாக்காளர் தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு பங்கேற்றார்.

இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு அனுப் சந்திர பாண்டே, திரு அருண் கோயல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கான நடைமுறை உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சீர்திருத்தங்கள் தொடர்பான அனைத்து முடிவுகளும், அரசியல் கட்சிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், 1951 ஆம் ஆண்டு 17 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 94 கோடியாக அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிகபட்சமாக 67.4 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல்களில் வாக்காளர்கள் அதிக உத்வேகத்துடன் வாக்களிக்க முன்வருவதாகவும், தேர்தல் நடைமுறையை பலப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்கி வருவதையும் நினைவுகூர்ந்தார்.


இந்த நிகழ்ச்சியில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வாக்குப்பதிவு நடைமுறைக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.
**************
AP/ES/PK/KRS
(Release ID: 1893700)
Visitor Counter : 223