உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் இரண்டு நாள் சிறு தானிய மாநாட்டிற்கு ஏற்பாடு: சிறு தானியங்களுக்கு சிறப்புக் கவனம் அளிக்கும் உணவுப் பதப்படுத்தும் துறையின் பங்குதாரர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சி
Posted On:
24 JAN 2023 5:05PM by PIB Chennai
2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 20 மாநிலங்களின் 30 மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடத்த மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறுதானியங்களில் இடம்பெற்றுள்ள ஊட்டச்சத்து பற்றிய விவரங்களும், அதனை மதிப்புக் கூட்டுப்பொருளாக மாற்றி விற்பனை செய்வதுபற்றியும், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த விவரங்களும் விரிவாக அளிக்கப்பட உள்ளன. இந்த 30 மாவட்டங்களில் தமிழகத்தின் விருதுநகர் மற்றும் தருமபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஆந்திரப் பிரதேசத்தைப் பொருத்தவரை பார்வதிபுரம் மனியம், விஜயநகரம் ஆகியவற்றிலும், தெலங்கானவின் மஹபூப் நகர், பீகாரின் போஜ்பூர், குஜராத்தின் டங் உள்ளிட்டவற்றிலும் சிறுதானிய மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.
பிரதமரின் குறு மற்றும் சிறு உணவுப் பதப்படுத்துதல் தொழில்முனைவோர் அமைப்புத் திட்டத்தின் கீழ், சிறுதானிய மாநாடுகள் நடத்தப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தின் மண்ட்லாவில் 2023 ஜனவரி 21-22 ம் தேதிகளிலும், ஆந்திராவின் விஜயநகரத்தின் 2023 ஜனவரி 22-23ம் தேதிகளிலும் இந்த மாநாடு நடத்தப்பட்டன. விஜயநகரத்தில் நடைபெற்ற சிறுதானிய மாநாட்டை ஆந்திர சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் திரு கோலகட்லா வீரபத்தரசுவாமி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழில்துறையின் இயக்குநர் திரு பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடக்க உரையாற்றிய, திரு கோலகட்லா வீரபத்தரசுவாமி, ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும், சிறுதானிய மதிப்புக் கூட்டுப்பொருட்களின் சந்தை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த சிறுதானிய உணவுகளைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி, உணவுப்பதப்படுத்தும் துறையில் சிறுதானியங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் பங்குதாரர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முன்முயற்சியாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் சுய உதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தி நிறுவனங்கள், கூட்டுறவு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றைச்சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் சிறு தானியங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த பல்வேறு உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
***
AP/ES/RS/KRS
(Release ID: 1893366)
Visitor Counter : 158