பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் போர்ட் ப்ளேரில் அந்தமான் நிக்கோபார் பாதுகாப்பு தயார் நிலைகளை ஆய்வு செய்தார்

Posted On: 05 JAN 2023 6:57PM by PIB Chennai

போர்ட் ப்ளேரில் அமைந்துள்ள நாட்டின் முதலாவது முப்படைகளின் விசாரணை தலைமையகத்தில் அந்தமான் நிக்கோபார் பாதுகாப்பு தயார் நிலைகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு குறித்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (05.01.2023) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அந்தமான் நிக்கோபார் தீவுகளின் புவிசார்ந்த ராணுவ முக்கியத்துவம் குறித்தும் இந்தப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் செல்வாக்கை விரிவுபடுத்துவதில் தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அந்தமான் நிக்கோபார் பாதுகாப்புப் பிரிவு தலைமை கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங், அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

அந்தமான் நிக்கோபார் பாதுகாப்புப் பிரிவின் சாதனைகள், எதிர்காலத்திட்டம் மற்றும் சவால்கள் பற்றியும் பாதுகாப்பு அமைச்சரிடம் அவர் எடுத்துரைத்தார். மத்திய அரசின் கிழக்குப் பகுதி செயல்பாட்டுக் கொள்கை மற்றும் அண்டை நாடுகளுடன் கடல்வழியாக நட்புறவுக்கு பாலம் அமைத்தலுக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் சாகர் திட்டத்தை நனவாக்குவதில் இந்தப் பிரிவின் முக்கிய பங்களிப்பையும் அவர் விவரித்தார்.

இந்த ராணுவப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தேசப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் கடல் பகுதி பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை பராமரிப்பது ஆகியவற்றில் இதன் பங்களிப்பை பாராட்டினார். மேலும், மனிதாபிமான உதவிகள் செய்வதிலும் பேரிடர் நிவாரணத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, 1943, டிசம்பர் 29-ல் நேதாஜியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை இடமான சங்கல்ப் சமாரக் பகுதியை பார்வையிட்ட பாதுகாப்பு அமைச்சர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அங்கு இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் செய்த தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர் அஞ்சலி செலுத்தினார். போர்ட் ப்ளேருக்கு அவர் வருகை தந்தபோது அவரை, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் அட்மிரல்  (ஓய்வு) டி கே ஜோஷி மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

**

AP/SMB/KPG/PK

 


(Release ID: 1888985) Visitor Counter : 188


Read this release in: English , Urdu , Hindi