ஜல்சக்தி அமைச்சகம்
ஆண்டுக் கண்ணோட்டம் 2022: ஜல்சக்தி அமைச்சகம்
Posted On:
03 JAN 2023 3:44PM by PIB Chennai
நாட்டின் நீர் ஆதாரங்களை ஒழுங்குமுறைப்படுத்தி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல் கொள்கைகளை உருவாக்க மத்திய ஜல்சக்தி அமைச்சகம், நீர் ஆதாரத்துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு போன்றவைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நிலையான வளர்ச்சி, தரப்பராமரிப்பு, வளரும் தேவைகளுக்கு ஏற்ப நீர் ஆதாரங்களை தேவையான அளவிற்கு பயன்படுத்துதல் போன்றவைகளைக் குறிக்கோளாகக் கொண்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கங்கையைத் தூய்மைப்படுத்தும் தேசிய இயக்கமான நவாமி கங்கா திட்டம் உலக அளவில் நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கும் திட்டங்களில் தலைசிறந்த முதல் 10 முன்முயற்சிகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2,056 கோடி மதிப்பிலான 43 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரூ.32,898 கோடி மதிப்பிலான 406 திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 2021-26-ஆம் ஆண்டு வரை ரூ.93,068 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் சுமார் 22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். மாநிலங்களுக்கு ரூ.37,454 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அடல் நிலத்தடி நீர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.6,000 கோடி மதிப்பிலான நிலையான நிலத்தடி நீர் மேலாண்மையை ஏற்படுத்த வறட்சி மிகுந்த 8221 கிராம பஞ்சாயத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேசிய நீர் தகவல் மையத்தின் மூலம் நீர் ஆதாரங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். அனைத்து மத்திய மற்றும் மாநில அமைப்புகள் தங்கள் பகுதிகளில் அமையப் பெற்றுள்ள ஆறுகளின் கொள்ளளவு, நீர்பிடிப்பு ஆதாரங்கள், நிலத்தடி நீர் மற்றும் பல்வேறு தகவல்கள் இதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
வெள்ள மேலாண்மை மற்றும் எல்லையோரப் பகுதிகள் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவியாக ரூ.6686.79 கோடி பல்வேறு மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் இயக்கத்தின் கீழ், மழைநீரை சேமிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்தந்தப் பகுதிகளின் காலநிலைகளுக்கு ஏற்பவும் மண்ணின் தன்மையை அறிந்து அதற்கேற்ற வகையில், மழைநீர் சேகரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888318
***
AP/GS/KPG/PK
(Release ID: 1888415)
Visitor Counter : 221