மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பிரம்மாண்டமான விழாவோடு நிறைவுக்கு வந்தது வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி
Posted On:
16 DEC 2022 9:58PM by PIB Chennai
முக்கிய அம்சங்கள்:
ஒரு மாத காலம் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நவம்பர் 19, 2022 அன்று பிரதமர் தொடங்கி வைத்தார்.
‘ஒரே பாரதம் - உன்னத பாரதம்' என்ற உணர்வை நிலை நிறுத்துவதற்காக ‘விடுதலையின் அமிர்த பெருவிழாவின்' ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடிதான் ஊக்கமாக இருந்தார்- திரு யோகி ஆதித்யநாத்
தமிழகத்திற்கும், காசிக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள நெருங்கிய உறவை இந்த திருவிழா புதுப்பிக்கிறது- திரு ஆர். என் ரவி
பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம், இதுவரை இல்லாத வகையில் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தி உள்ளது- திரு தர்மேந்திர பிரதான்
ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்ற சிந்தனையை காசி தமிழ் சங்கமம் முன்னெடுத்துச் செல்கிறது- திரு ஜி கிஷன் ரெட்டி
ஒரு மாத காலம் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம், டிசம்பர் 16, 2022, வெள்ளிக்கிழமையன்று பிரம்மாண்டமான நிகழ்ச்சியோடு நிறைவு பெற்றது. பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், தமிழக ஆளுநர் திரு ரவீந்திர நாராயன் ரவி, மத்திய கல்வி மற்றும் திறன் வளர்ச்சி, தொழில்முனைவு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்கான அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மற்றும் இதர பிரமுகர்கள் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான காசி தமிழ் சங்கமம் இன்று ஒரு வகையில் நிறைவடைந்தாலும் இது முற்றுப் பெறவில்லை, மாறாக, தமிழகத்தின் கலாச்சாரம், தத்துவம், மொழி மற்றும் அறிவையும் உலகெங்கும் பிரபலமான காசி நகரத்தையும் இணைக்கும் சங்கமத்தின் தொடக்கமே என்று தமது உரையில் திரு அமித் ஷா குறிப்பிட்டார். நீண்டகால அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டிருந்த நமது கலாச்சார ஒற்றுமை, பன்முகத்தன்மை வாய்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான இந்தியத்துவம் முதலியவற்றை புதுப்பிக்கும் வகையில் இத்தகைய முயற்சிகள் சுதந்திரம் அடைந்தவுடன் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டின் போது இந்திய கலாச்சார ஒற்றுமையைப் புதுப்பிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி முயன்றதாக திரு ஷா குறிப்பிட்டார்.
பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், கலைகளைக் கொண்டிருக்கும் நாடாக இந்தியா திகழ்ந்த போதும், அதன் உணர்வு என்பது ஒன்றே என்று உள்துறை அமைச்சர் கூறினார். உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் புவி-அரசியல் காரணங்களின் அடிப்படையில் உருவானபோதும், இந்தியா மட்டும்தான் புவி- கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவானதாக அவர் தெரிவித்தார். பல்வேறு கலாச்சாரங்கள் தான் நம் நாட்டு ஒற்றுமையின் அடித்தளம் என்று கூறிய அமைச்சர், காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் வாயிலாக நமது கலாச்சாரங்களை இணைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி முயன்றுள்ளதாகவும், இது எப்போதும் தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியக் கலாச்சார ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், பல்வேறு வழிகளில் ஒரே நாட்டின் இரண்டு பிரிவுகளிடையே வேற்றுமையை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்றதாகவும் திரு அமித் ஷா வேதனை தெரிவித்தார். ‘ஒரே பாரதம் - உன்னத பாரதம்’ உருவாவதை உறுதி செய்யும் தருணம் இது, இதற்கு இந்தியக் கலாச்சார ஒற்றுமை இன்றியமையாதது என்றும் திரு ஷா வலியுறுத்தினார். இந்தியாவின் இரண்டு முக்கிய கலாச்சாரங்களுக்கு இடையே பாலத்தை அமைக்கவும், அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, இந்திய கலாச்சாரப் புதுப்பித்தலுக்கு வழி வகுக்கவும் இந்நிகழ்ச்சி உதவிகரமாக இருந்துள்ளது என்றார் அவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் ஏராளமான கலை வடிவங்களுக்கு காசியில் இடம் கிடைத்திருப்பதாக திரு ஷா கூறினார். ஆன்மீகம், கலாச்சாரம், கட்டுமானம், இலக்கியம், வர்த்தகம், கல்வி, கலை, நடனம், இசை மற்றும் மொழிகள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ளும் ஆகச் சிறந்த தளமாக காசி- தமிழ் சங்கமம் திகழ்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார். உலகளவில் மிகப் பழமையான மொழிகளுள் தமிழும் ஒன்று என்பதை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் வாயிலாக ஒட்டுமொத்த வட இந்தியாவும், அனைத்து இந்தியர்களும் புரிந்து கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழக மக்களை மனமார வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு முதல் குஜராத், வங்காளம் மற்றும் கேரளா வரையிலான இந்த மாபெரும் நாடு தமிழகத்தின் சகோதர சகோதரிகளை வரவேற்பதற்கு உளமார ஆயத்தமாக உள்ளது என்றும் திரு ஷா பெருமிதத்துடன் கூறினார். நம்பிக்கைக்கும் அன்பிற்கும் இடையே ஓர் ஒற்றுமை உள்ளது என்றும், அதனைக் கட்டாயத்தின் பேரில் உருவாக்க முடியாது என்றும் அவர் கூறினார். இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே நம்பிக்கை மற்றும் அன்பில் புதிய சூழல் உருவாகி இருப்பதைக் காசி தமிழ் சங்கமம் இன்று உறுதிப்படுத்தி இருப்பதாகவும், விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டின் மிகப்பெரிய சாதனை இது, என்றும் திரு ஷா தெரிவித்தார்.
இந்திய மாணவர்களின் உதவியுடன் நாட்டின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வழியாக நமது பெருமை வாய்ந்த ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய அறிவை உலகிற்கு எடுத்துரைப்பதற்காக புதிய கல்விக் கொள்கையில் பிரதமர் திரு நரேந்திர மோடி விரிவான மாற்றங்களை செய்திருப்பதாக திரு அமித் ஷா கூறினார். நமது சொந்த மொழிகளும், பெருமையும் தான் புதிய கல்விக் கொள்கையின் ஆணிவேர் என்றும், அதனால் தான் தாய்மொழி வாயிலாக கல்விக் கற்றுத் தரப்பட வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கையில் பிரதமர் திரு மோடி வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்துவதற்காக மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் சட்டம் ஆகியவை தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் கற்றுத் தரப்படுவதை மாநில அரசு உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு யோகி ஆதித்யநாத், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக பிரதமர் திரு நரேந்திர மோடி திகழ்ந்ததாகக் கூறினார். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஒரு மாத காலத்தில் தமிழகத்திலிருந்து காசி வந்ததை அவர் சுட்டிக் காட்டினார். உலகின் இரண்டு பழமையான கலாச்சாரங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, “ஒரே பாரதம் - உன்னத பாரதம்” என்ற உணர்வை அவர்கள் கண்கூடாகக் கண்டனர்.
தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையே உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நெருங்கிய உணர்வை இந்தத் திருவிழா புதுப்பித்திருப்பதாக திரு ரவீந்திர நாராயன் ரவி தமது உரையின்போது குறிப்பிட்டார். இந்த விழா இன்று முடிவுக்கு வந்தாலும், இந்த உறவுமுறை வரும் நாட்களில் மேலும் வலுவடையும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான ‘ஒரே பாரதம் - உன்னத பாரதம்' என்ற உணர்வு இந்த சங்கமத்தால் நிறைவடைந்திருப்பதாகவும், இது மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் என்ற ஒரு மாத கால நிகழ்வு, முன் எப்போதும் இல்லாத வகையில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தி இருப்பதாக திரு பிரதான் கூறினார். நமது நாகரிக, ஆன்மீக, கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரை இந்த நிகழ்வு ஊக்குவித்து, நம்மை மேலும் வளப்படுத்தி இருக்கிறது என்றார் அவர். இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணமாக இருந்த காசி மற்றும் தமிழக மக்கள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் உத்தரப் பிரதேச அரசிற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை புரிந்ததிலிருந்து காசி தமிழ் சங்கத்தின் வெற்றி நிரூபனமாவதாக திரு பிரதான் தெரிவித்தார். அதே வேளையில் டிஜிட்டல் ஊடகம் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து இணைந்திருந்தனர். தமிழகம் மற்றும் காசியைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட கலைஞர்களும், சுமார் 300 விருந்தினர்களும், 75 நிபுணர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்தத் திருவிழா, இந்திய கலாச்சாரம் மற்றும் வலிமையின் சங்கமம் என்று மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்கான அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்தார். காசியின் விஸ்வநாதர் ஜோதிலிங்கம், தமிழகத்தின் ராமேஸ்வரம் ராமநாதர் சுவாமி ஜோதிர்லிங்கத்தின் சங்கமத்தை காசி தமிழ் சங்கமம் எடுத்துரைக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆன்மீக மற்றும் கலாச்சார இணைப்பை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்று சிந்தனையை காசி தமிழ் சங்கமம் முன்னெடுத்துச் செல்வதாக அவர் கூறினார்.
இந்த விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாடுகள் மற்றும் சாதனைகளை விளக்கும் ‘மோடி @ 20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' (Modi @ 20: Dreams Meet Delivery) மற்றும் 'அம்பேத்கர் அண்ட் மோடி: ரிஃபார்மர்ஸ் ஐடியா பெர்ஃபார்மர்ஸ் வர்க் (Ambedkar and Modi: Reformer’s Idea Performer’s Work) ஆகிய இரண்டு புத்தகங்களின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டன.
நிறைவு விழாவின் கலை நிகழ்ச்சியில் தமிழக கலைக் குழுக்கள் மற்றும் உள்ளூர் நாட்டுப்புறக் கலைஞர்களின் கண்கவர் நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தின.
‘ஒரே பாரதம் - உன்னத பாரதம்' என்ற உணர்வை நிலைநிறுத்துவதற்காக விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. ஒரு மாத காலம் நடைபெற்ற நிகழ்ச்சியை நவம்பர் 19, 2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தமிழகம் மற்றும் காசிக்கு இடையேயான உறவை புதுப்பிப்பதே இதன் நோக்கமாகும். கலாச்சார மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள், இலக்கியவாதிகள், தொழில்முனைவோர், விவசாயிகள், ஆன்மீகத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 2500 பிரதிநிதிகள் சிறு, சிறு குழுக்களாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காசி மட்டுமல்லாமல் பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் தமிழகப் பிரதிநிதிகள் குழு சென்றது. கல்வி, கலை மற்றும் கலாச்சாரம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு, திரைப்படங்கள், கைத்தறி மற்றும் கைவினை, கலை குறித்த கண்காட்சிகளும் நடைபெற்றன. இது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர்கள், உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்கள் மற்றும் இதர பிரமுகர்களும் ஒரு மாத காலம் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டனர்.
**************
AP/RB/DL
(Release ID: 1884366)
Visitor Counter : 173