குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
நீடித்த தொழில் வளர்ச்சிக்காக எம்எஸ்எம்இ சாம்பியன் திட்டம்
Posted On:
15 DEC 2022 2:38PM by PIB Chennai
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் ‘எம்எஸ்எம்இ சாம்பியன்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களது உற்பத்தி செயல்முறைகளை நவீனப்படுத்துதல், கழிவுகளை குறைத்தல், புதுமைகளை ஊக்குவித்தல், வணிகப் போட்டித் தன்மையை அதிகரித்தல் மற்றும் தேசிய உலகளவில் உயர் சிறப்பை அடைதல் போன்ற நோக்கங்களோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன.
எம்எஸ்எம்இ- நீடித்த வளர்ச்சி (குறைபாடற்ற மற்றும் விளைவுகள் அற்ற தன்மை), எம்எஸ்எம்இ –போட்டித்தன்மை (லீன்), எம்எஸ்எம்இ – புதுமைத் தன்மை(தொழில் பாதுகாப்பகம், ஐபிஆர் வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் எம்எஸ்எம்இ) ஆகிய 3 அம்சங்கள் எம்எஸ்எம்இ சாம்பியன் திட்டத்தில் உள்ளன.
குறைபாடற்ற மற்றும் விளைவுகள் அற்ற தன்மை என்ற அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு அம்சங்களில் ஆராயப்பட்டு வெண்கலம், வெள்ளி, தங்கம் என்ற அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
2022 ஏப்ரல் 28ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத்திட்டத்தில் 22 ஆயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதிப்பீட்டின் அடிப்படையில், 734 நிறுவனங்கள் வெண்கலம் தகுதிச் சான்றிதழையும், 32 நிறுவனங்கள் வெள்ளி தகுதிச் சான்றிதழையும், 25 நிறுவனங்கள் தங்கத் தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளன.
இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.
**************
AP/PLM/RS/KPG
(Release ID: 1883827)