பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறை தீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பு மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 60 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்

Posted On: 15 DEC 2022 1:00PM by PIB Chennai

மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும்கண்காணிப்பு அமைப்பு (சிபிஜிஆர்ஏஎம்எஸ்) மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது 01.01.2020 முதல் 30.11.2022 வரை  60 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவிஅறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த திரு ஜிதேந்திர சிங், குறைதீர்ப்பு  நடைமுறைகளை திறம்பட்ட முறையில் விரைவாக மேற்கொள்ள அரசு முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார். சிபிஜிஆர்ஏஎம்எஸ் முறை, இணையதளத்தில் மக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்வதற்கான வசதியை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தீர்க்கப்பட்ட குறைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க பின்னூட்ட அழைப்பு மையத்தையும் அரசு ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் கூறினார். தீர்க்கப்பட்ட குறைகள் மீது திருப்தி ஏற்படவில்லை என்றால், பொதுமக்கள் தொலைபேசி அழைப்பு மையத்தின் மூலம் மேல்முறையீட்டை பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி 2021 முதல் நவம்பர் 2022 வரை 40 லட்சத்து 73 ஆயிரத்து 464 குறைகள் தீர்க்கப்பட்டதாகவும், அதில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 932 மேல் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திரு ஜிதேந்திர சிங் தமது பதிலில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொருத்தவரை, 2 லட்சத்து 72 ஆயிரத்து 552 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 12 ஆயிரத்து 325 புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும் அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

**************

AP/PLM/RS/KPG


(Release ID: 1883718)
Read this release in: English , Urdu , Telugu