கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த தஞ்சாவூர் உட்பட 7 இடங்களில் மண்டல கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்


மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி

Posted On: 12 DEC 2022 5:56PM by PIB Chennai

 

கலை, கலாச்சாரம் மற்றும் கைவினைத் தொழில்களை மேம்படுத்த ஏதுவாக மத்திய கலாச்சாரத்துறை சார்பில்,  நாடு முழுவதும் 7 இடங்களில்  தலைமை அலுவலகத்துடன் கூடிய மண்டல கலாச்சார மையங்கள் அமைக்கப்படும். இதில் பாட்டியாலா, நாக்பூர், உதய்பூர், பிரயாக்ராஜ், கொல்கத்தா, திமாப்பூர், தஞ்சாவூர்  ஆகிய நகரங்களில்  இந்த மண்டல கலாச்சார மையங்கள் அமைக்கப்படுகின்றன. மாநில அரசுகளின் உதவியுடன் ஆண்டு முழுவதும் இந்த மண்டல கலாச்சார மையங்கள் வாயிலாக, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அவ்வாறு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளுக்கு மண்டல கலாச்சார மையங்களுக்கு  மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.  மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படாமல் நேரடியாக  மண்டல கலாச்சார மையங்களுக்கு நிதி வழங்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள கலை, கலாச்சாரம் மற்றும் கைவினைக் கலைஞர்களின்  திறமைகளை   உலகறியச் செய்யும் வகையில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் மண்டல கலாச்சார மையங்கள் மூலம் ராஷ்ட்ரிய சான்ஸ்கிருதி மஹோத்சவம் (ஆர் எஸ் எம்) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை மொத்தம் 12 ஆர் எஸ் எம்-கள் மத்திய கலாச்சாரத் துறை சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டுதோறும் கலாச்சாரம் மற்றும் கலை மேம்பாட்டுக்காக,  குறைந்தபட்சம் 42 மண்டல அளவிலான  திருவிழாக்கள், மண்டல கலாச்சார மையங்கள் சார்பில்  நடத்தப்படுகின்றன. குறிப்பாக, அழிவின் விளிம்பில் உள்ள கலைகளை ஆவணங்களாக மாற்றும் முயற்சியும் இந்த மண்டல கலாச்சார மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும். குறிப்பாக, பல கலைகள் வீடியோ மற்றும் ஆடியோவை உள்ளடக்கி டிஜிட்டல் ஆவணமாக மாற்றப்பட உள்ளன. மேலும்  நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், திறமைவாய்ந்த இளம் கலைஞர்களுக்கு விருது, குருசிஷியா பரம்பரா, நாடகத்திற்கு புத்துயிரூட்டல், ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதல், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினரின் கலைகளை ஊக்குவித்தல், வடகிழக்குப் பிராந்தியத்தின் கலாச்சார பாரம்பரியங்களை முன்னெடுத்துச் செல்லுதல், தேசிய அளவில் கலாச்சார பாரம்பரியங்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற  பல்வேறு நடவடிக்கைகளை  மத்திய   அரசு மேற்கொண்டு வருகிறதென மக்களவையில்  2022 டிசம்பர் 12ம் தேதி எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கலாச்சார, சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு கிஷன்ரெட்டி அளித்துள்ள பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

**************

AP/ES/RS/IDS


(Release ID: 1883046) Visitor Counter : 175


Read this release in: English , Urdu , Hindi , Telugu