குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 2.44 லட்சம் பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன
தமிழகத்தில் 2021-22 –ம் நிதி ஆண்டில் 5972 பேர் பயனடைந்துள்ளனர்
प्रविष्टि तिथि:
12 DEC 2022 1:33PM by PIB Chennai
மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலமாக, 2008-09-ம் ஆண்டு முதல், விவசாயம் அல்லாத துறைகளில் குறுந்தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம், நாட்டில் சுயவேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தை (PMEGP) செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் துறைக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர, இத்திட்டத்தின் கீழ் பின்வரும் வர்த்தக மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கும் கடன்கள் அனுமதிக்கப்படுகின்றன:
- வடகிழக்கு மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் விற்பனை நிலையங்கள் மூலம் வணிகம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள
- காதி பொருட்கள் விற்பனை செய்யும் சில்லரை விற்பனை நிலையங்கள், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலம் சான்று அளிக்கப்பட்ட கிராம தொழில்துறை பொருட்கள் மற்றும் பாரம்பரிய தொழில்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கான நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் பூங்காக்களில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஆகியவையும் நாடு முழுவதும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
- நாடு முழுவதும் உற்பத்தி / சேவை நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் சில்லரை விற்பனை நிலையங்களும் இத்திட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றன.
- மேலே கொடுக்கப்பட்டுள்ளதில் (i) மற்றும் (ii)-ன் கீழ் வரும் வணிக / வர்த்தக நடவடிக்கைகளுக்கான திட்டத்தின் அதிகபட்ச திட்ட மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
- ஒரு மாநிலத்தில் ஒரு ஆண்டில் நிதி ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக 10 சதவீதத்தை (i) மற்றும் (ii) கீழ் உள்ள வணிக / வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2019-20-ம் நிதி ஆண்டில் 5172 பேரும், 2020-21 –ம் நிதி ஆண்டில் 5188 பேரும், 2021-22 –ம் நிதி ஆண்டில் 5972 பேரும் பயன்பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 2019-20-ம் நிதி ஆண்டில் 66653 பேரும், 2020-21 –ம் நிதி ஆண்டில் 74415 பேரும், 2021-22–ம் நிதி ஆண்டில் 103219 பேரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்.
இந்த தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணை அமைச்சர் திரு. பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.
**************
AP/PLM/RS/IDS
(रिलीज़ आईडी: 1882748)
आगंतुक पटल : 220