அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்கக் கடலில் பருவநிலை மாற்றத்தால் வருங்காலத்தில் அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்கக்கூடும்: விஞ்ஞானிகள் கணிப்பு

Posted On: 09 DEC 2022 12:31PM by PIB Chennai

இந்திய பெருங்கடல், அரபிக் கடலின் வடக்கு பகுதி மற்றும் மத்திய வங்கக் கடலில் வரும் காலங்களில் அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்கக் கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதன் மூலம் உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்படுவதுடன், சரியான திட்டமிடலால் கடலோர பகுதிகளில் உயிர் மற்றும் உடைமைகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்துவதிலிருந்து தடுக்க முடியும்.

 

பருவநிலை மாறிவரும் சூழலில், அண்மைக் காலங்களில் அடிக்கடி அலைகளின் சீற்றம் அதிகரித்து வருவது, கடலோர மக்களின் வாழ்வாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அலைகளின் சீற்றம், மற்றும் அதன் பாதிப்பு பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.  எனவே உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கவும், கடல்சார் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த மேம்பட்ட புரிதல் அவசியமாகிறது.

 

தில்லி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் செயல்முறை அறிவியல் துறை, கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஐதராபாத்தின் பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழு இந்திய பெருங்கடலில் எதிர்காலத்தில் அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று கணித்துள்ளது. ‘கிளைமேட் டைனமிக்ஸ்' என்ற சஞ்சிகையில் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் வாரியத்தின் ஆதரவோடு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

**************

AP/RB/IDS



(Release ID: 1882187) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi , Marathi