சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்

Posted On: 06 DEC 2022 5:50PM by PIB Chennai

நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஒரு திட்டத்தை வகுக்க பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கூட்டத்தை விரைவில் தாம் கூட்டஉள்ளதாக  அவர் கூறினார்.

சென்னையில் விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்திய அவர், கேலோ இந்தியாவின் பல்வேறு மையங்களை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். விளையாட்டு அறிவியலுக்காக சில மையங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 ஒரு விளையாட்டு வீரர் அறிவியலின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாது எனக் கூறிய அமைச்சர், விளையாட்டு வீரர்களின் வெற்றியில் ஏராளமான அறிவியல் உள்ளது என்றார். இந்த திசையில் மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும், ஹரியானா மாநிலம் சோனிபெட்டில் ஒரு விளையாட்டு அறிவியல் மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேபோன்ற மையங்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரிலும், பாட்டியாலாவிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர். இத்தகைய விளையாட்டு அறிவியல் மையங்களை உருவாக்குவதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் அரசு பேச்சுவார்த்தை  நடத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சுமார் 40 முதல் 50 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் விரைவில் தாம் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளதாக  கூறிய அவர், விளையாட்டுத்துறையில் பல்கலைக்கழகங்கள் சிறப்பான முறையில் ஈடுபடமுடியும் என்றார். வெற்றிகரமான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்கள் மிக முக்கியமான பங்காற்ற முடியும் என்று கூறிய அமைச்சர், நாட்டில் உள்ள  943 தனியார் பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் 50 முதல் 100 விளையாட்டு வீரர்களை தத்தெடுத்து அவர்களது கல்வி மற்றும் விளையாட்டு திறனை  கவனித்து கொள்ளலாம் என்று கூறினார்.  இவ்வாறு பல்கலைக்கழகங்கள் இதில் ஈடுபடும் போது நாட்டுக்கு சுமார் 900 முதல் 1000 உயர்தரமான விளையாட்டு வீரர்கள் கிடைப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.  

விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிக் கவனம் செலுத்திவருவதாக அமைச்சர் தெரிவித்தார்.  திறன் தேர்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 விளையாட்டுக்களிலிருந்து 2,745 விளையாட்டு வீரர்கள்  கண்டறியப்பட்டுள்ளனர். பயிற்சி மற்றும் பயணம், உணவுப்படி, மருத்துவச் செலவுகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.28 லட்சம்  வழங்கப்படுகிறதுஎன்று அமைச்சர் கூறினார்.

நலிந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பண்டிட் தீன்தயாள் உபாத்யாய தேசிய நல்வாழ்வு நிதி மூலம் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.

கேலோ இந்தியா மொபைல் செயலி மூலம் 5 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லும் குழந்தைகைளின் விளையாட்டைத் திறன் கண்டறியப்பட்டு  பள்ளி செல்லும் சுமார் 23 லட்சம் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதிலும் உள்ள 299 விளையாட்டு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.2438.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல்  அளித்துள்ளது என்று கூறிய மத்திய அமைச்சர், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், நமது மண் சார்ந்த கிராமப்புற விளையாட்டுகளான கம்பத்தில் மல்யுத்தம், களரிப்பயிற்று, சிலம்பம் போன்றவைகளை கண்டறியப்பட்டு அவற்றை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.

 

**************

AP/PKV/GS/AG/KPG/IDS


(Release ID: 1881190) Visitor Counter : 160


Read this release in: English , Urdu , Hindi