பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 25 NOV 2022 4:23PM by PIB Chennai

மாவீரர் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் தலைநகருக்கு வருகை தந்துள்ள  அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

அசாம் ஆளுநர்  பேராசிரியர் ஜெகதீஷ் முக்கி அவர்களே, அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எனது நண்பர் திரு சர்பானந்த சோனாவால் அவர்களே, சட்டப்பேரவைத் தலைவர் திரு பிஸ்வஜித் அவர்களே, ஓய்வு பெற்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்களே, திரு தபன் குமார் கோகோய் அவர்களே, அசாம் மாநில அமைச்சர் பியூஷ் அசாரிகா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அசாம் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இந்நாட்டின் மற்றும் வெளிநாட்டின் பிரமுகர்களே!

முதலாவதாக அன்னை இந்தியாவுக்கு லச்சித் போர்புகான்  போன்ற உறுதிமிக்க நாயகர்களை அளித்த மகத்தான அசாம் பூமிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். மாவீரர் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த நாள் விழா  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி 3 நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்க கிடைத்துள்ள வாய்ப்பு எனது பெருமையாகும்.

நண்பர்களே!

சுதந்திரத்தின் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடும் நேரத்தில் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்தநாளையும் நாடு கொண்டாடுகிறது. இந்தியாவின் நிலைத்த கலாச்சாரம், நிலைத்த வீரம், நிலைத்த சகவாழ்வு என்ற மகத்தான பாரம்பரியத்திற்கு இந்த விழாவின் போது, நான் தலைவணங்குகிறேன். இந்தியா தனது கலாச்சார பன்மைத்துவத்தைக் கொண்டாடுவது மட்டுமின்றி வரலாற்றில் அறியப்படாத நாயகர்கள், நாயகிகளையும் பெருமையுடன் நினைவுகூர்கிறது. லச்சித் போர்புகான் போன்ற பாரதத் தாயின் அழியாப் புகழ் கொண்ட புதல்வர்கள் அமிர்த காலத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு  உந்துசக்தியாக விளங்குகிறார்கள்.

நண்பர்களே!

மனிதகுல வாழ்க்கையின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஏராளமான நாகரீகங்கள் இருந்துள்ளன. இவற்றில் பல, அழிவற்றதாக இருந்தாலும் காலச்சுழற்சியில், அவை அடிபணிந்துள்ளன. எஞ்சியுள்ள நாகரீகங்களின் அடிப்படையில், வரலாற்றை உலகம் இன்று மதிப்பீடு செய்யும்போது  இந்தியா பல எதிர்பாராத திருப்பங்களையும் கற்பனை செய்ய இயலாத வகையில், அந்நிய ஊடுருவல்களையும் ஆற்றலுடன் எதிர்கொண்டிருப்பது தெரிகிறது. இது நிகழ்வதற்கு காரணம் நெருக்கடியான நேரத்தில், ஆளுமைகள் அவற்றை சமாளித்து முன்னேறுகிறார்கள் என்ற உண்மை நிலைதான். லச்சித் போர்புகான்  போன்றோரின் அஞ்சாநெஞ்சங்கள் தீவிரவாத மற்றும் பயங்கரவாத சக்திகளின்  அழிவுக்கு  வழி ஏற்படுத்தின. இந்தியர்களின் வழியாக வாழ்க்கை ஒளி இன்னமும் நிலைபேறு உடையதாக இருக்கிறது.

அசாமும் வடகிழக்கு மாநிலங்களும் ஒப்பற்ற வீரத்தைக் கொண்டிருந்தன. இந்த மண்ணின் மக்கள், துருக்கியர்கள், ப்கானியர்கள், முகலாயர்கள் ஆகியோரைக் கண்டிருக்கிறார்கள்; பல தருணங்களில் அவர்களை விரட்டியிருக்கிறார்கள்.   முகலாயர்கள், குவஹாத்தியை கைப்பற்றியபோதும் லச்சித் போர்புகான் போன்றோரின் வீரத்தால் முகலாய சக்ரவர்த்திகளின் பிடியிலிருந்து அது விடுதலை பெற்றது.

நண்பர்களே!

இந்தியாவின் வரலாறு அடிமைத்தனம் பற்றியது மட்டுமல்ல; வளர்ந்து வரும் வெற்றியைப் பற்றியது, எண்ணற்ற மாமனிதர்களின் வீரத்தைப் பற்றியது, துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகும் அடிமைக்கால சதியால் எழுதப்பட்ட அதே வரலாறு நமக்கு கற்றுத்தரப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின் நம்மை அடிமைப்படுத்திய அந்நியர்கள் பற்றிய தகவல் தொகுப்பில் மாற்றம் செய்திருக்க வேண்டும், ஆனால், அப்படி செய்யப்படவில்லை.  நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான சீற்றமிக்க போராட்ட வரலாறுகள்  வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளன. மைய நீரோட்டத்தின் இந்த சம்பவங்கள் சேர்க்கப்படாத தவறுகள் தற்போது சரி செய்யப்படுகின்றன.

நண்பர்களே!

லச்சித் போர்புகானின் வாழ்க்கைநாடு முதலில்என்ற மந்திரத்தை உயிர்ப்பிக்க  நமக்கு உத்வேகம் அளிக்கிறது. அவரது வாழ்க்கை, வாரிசு மற்றும் உறவினர்களுக்கு பதிலாக நாட்டை உயர்வாக கருதவேண்டும் என்பதை  கற்றுத்தருகிறது. தேசத்திற்கு மேலாக எந்தவொரு நபரோ, உறவோ இல்லை.

நினைவிற்கு எட்டாத காலத்திலிருந்து  நமது தேசம் ஞானிகளாலும் துறவிகளாலும் வழிநடத்தப்படுகிறது. அசாமின் புகழ் பெற்ற பாடலாசிரியர் பாரத ரத்னா விருது பெற்றவருமான புபேன் அசாரிகா இயற்றிய பாடலின்  இரண்டு வரிகளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் லச்சித் பேசுகிறேன். எனது பெயரை எல்லா நேரமும் நினைவில் கொள்ளுங்கள். பிரம்மபுத்ராவின் கரைகளில் உள்ள இளைஞர்களே, என்பது அவரது பாடலின் பொருளாகும். ஒரு தேசம் அதன் உண்மையான கடந்த காலத்தை காணும்போது மட்டுமே அதன் அனுபவங்களிலிருந்து எதிர்காலத்திற்கு சரியான திசையில் அது செல்லமுடியும். நமது வரலாற்று உணர்வு ஒரு சில  தசாப்தங்கள் மற்றும் சதாப்தங்களுக்குள் முடக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும்.

நண்பர்களே!

 

 சத்ரபதி சிவாஜி மகராஜ் போன்று லச்சித் போர்புகான் வாழ்க்கையை மாபெரும் மேடை நாடகமாக உருவாக்கி நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லவேண்டும். இது ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்ற தீர்மானத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.  வளர்ச்சியடைந்த இந்தியாவை, இந்தியாவின் வளர்ச்சி மையமாக வடகிழக்கு இந்தியாவை நாம் மாற்றவேண்டியுள்ளது. லச்சித் போர்புகானின் 400-வது பிறந்தநாள் விழாவின் உணர்வு நமது தீர்மானத்திற்கு வலு சேர்க்கும். இதன் மூலம் நாடு அதன் இலக்குகளை எட்டும். இந்த உணர்வோடு அசாம் அரசுக்கும், ஹிமந்தா அவர்களுக்கும், அசாம் மக்களுக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புனிதமான விழாவில் பங்கேற்றதன் மூலம் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக நான் உணர்கிறேன்.  உங்களுக்கு நான் மிகுந்த நன்றி உடையவனாக இருக்கிறேன்.

நன்றி!

**************



(Release ID: 1879033) Visitor Counter : 122