தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

செக்கோஸ்லோவேகியாவின் ஆர்டினரி ஃபெயிலியர் திரைப்படம் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமாக்கள் பிரிவில் திரையிடப்பட்டது

Posted On: 25 NOV 2022 7:56PM by PIB Chennai

உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தீர்கள் என்றால் நீங்கள் தோல்வியடையும் வாய்ப்பே இல்லை: இயக்குனர் கிறிஸ்டினா க்ரோஸன்

கொரோனா தொற்றின் போது ஆர்டினரி ஃபெயிலியர் படத்தை உருவாக்கும் எண்ணம் உருவானதாக அந்த படத்தின் இயக்குனர் கூறுகிறார். பெருந்தொற்று பரவிய காலத்தில் பொது மக்களின் வாழ்க்கை பெரிதளவு  பாதிக்கப்பட்டது, இந்த தருணத்தில் உண்மை நிலையை உணரவும் அதே நேரத்தில் எங்களது திரைக்கதையை வடிவமைக்கவும் எங்களுக்கு நேரம் கிடைத்தது என்கிறார் இயக்குனர் கிறிஸ்டினா க்ரோஸன்.

பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த டேபிள் டாப் நிகழ்ச்சியில் ஊடகத்தினருடனும் ஏனைய பிரதிநிதிகளிடமும் அவர் அவர் கலந்துரையாடினார்.

ஏற்கெனவே முழுமை பெறாத தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் மூன்று பெண்கள் திடீரென இயற்கை நிகழ்வு ஒன்று அவர்கள் வாழ்வில் குறுக்கிடுகையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து தனது ஆர்டினரி ஃபெய்லியர்ஸ் திரைப்படம் விளக்குவதாக இயக்குனர் தெரிவித்தார்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான மேரக் நோவாக் கூறுகையில் இது ஜனரஞ்சகமான திரைப்படமாக இல்லாமல் கலைப்படமாக தாம் எடுக்க துணிந்ததற்கு காரணமே செக்கோஸ்லோவாகியா மற்றும் ஐரோப்பாவில் இத்தகைய திரைப்படங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால்தான் என்று கூறினார்.

திரைப்படத்துறையில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் மற்றும் போதுமான ஆதரவற்ற தன்மை ஆகியவை பற்றிய கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் கிரிஸ்டினா நிலைமை மாறி வருவதாகவும் மகளிருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த துறையில் தாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மேலும் பல பெண்களை இந்த துறைக்கு வருமாறு அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த குறிப்பிட்ட திரைப்படம் பெண்களை மையப்படுத்தியதாக  இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒட்டுமொத்த சமூகத்தினருக்காகவே இந்த படத்தை எடுத்திருப்பதாகவும், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக தாம் எடுக்கவில்லை என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் நோவக் செக்கோஸ்லோவேகியாவில் பெரும்பாலும் திரைப்படங்களுக்கு வருபவர்கள் பெண்களே என்றும் குறிப்பிட்டார். இளைஞர்களும் நடுத்தர வயதினரும், வயது முதிர்ந்தவரும் என எந்தவித பாகுபாடும் இன்றி அனைவருமே ஆர்டினரி பெய்லியர் படத்தை ஏற்றுக்கொண்டது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது என்று இயக்குனர் கிரிஸ்டினா கூறினார்.

இந்த படத்தில் சமூகத்திற்கு பொருந்தாத ஒரு இளைஞி, பதட்டத்துடன் இருக்கும் ஒரு தாய் மற்றும் சமீபத்தில் விவாகரத்து பெற்ற ஒரு பெண்மணி ஆகிய மூவரும் ஒரு மர்மமான இயற்கை நிகழ்வால் பாதிக்கப்படுகிறார்கள். இதை எதிர்கொள்ளும் தருணத்தில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக அந்த மூன்று பெண்களுமே தங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்த முயற்சி மேற்கொள்கிறார்கள் என்பதாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.

**************



(Release ID: 1878989) Visitor Counter : 125