தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53 மணி நேர சவாலிற்காக கடந்த ஐந்து நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் இந்திய திரைப்படத் துறையின் திருப்புமுனையாக அமையும்: ஷார்ட்ஸ் தொலைக்காட்சியின் தலைவர்
53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற “75 நாளைய இளம் படைப்பாளர்கள்” போட்டியின் வெற்றியாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். ஷார்ட்ஸ் தொலைக்காட்சியுடன் இணைந்து தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியில் இந்தியா @100 என்ற தலைப்பில் 53 மணி நேரத்தில் பங்கேற்பாளர்கள் குறும்படங்களை உருவாக்கினார்கள்.
வெற்றிபெற்றவர்களைப் பாராட்டிப் பேசிய ஷார்ட்ஸ் தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி திரு கார்டர் பில்சர், “கடந்த ஐந்து நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் இந்திய திரைப்படத் துறையின் திருப்புமுனையாக அமையும். ஒவ்வொரு திரைப்படமும் தனித்துவமிக்கதாக இருந்தது” என்று கூறினார். 2047-ஆம் ஆண்டில் இந்தியா எவ்வாறு இருக்கும் என்பதை 5 திரைப்பட குழுக்களும் எடுத்துரைத்திருந்ததைப் பற்றி அவர் விளக்கினார். “டியர் டைரி” என்ற திரைப்படம் முதல் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.
வெற்றி பெற்ற ஐந்து திரைப்படங்களும் நவம்பர் 27-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஷார்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருப்பதாக திரு பில்சர் தெரிவித்தார். 53 மணிநேர சவால் என்ற கருத்துருவிற்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
(Release ID: 1878696)
AP/RB/KRS
**************
(Release ID: 1878745)