தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பான்-இந்திய திரைப்படங்கள் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை: ரிஷப் ஷெட்டி
இந்தியா விவசாயம் சார்ந்த நாடு; நமது சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவாக, இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் இயற்கை தெய்வத்தை நம்பும் வழக்கம் உள்ளது என்று 53வது சர்வதேச திரைப்பட விழாவின் போது 'கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துதல் மற்றும் புதிய சந்தைகளை அடையாளம் காணுதல் ' என்ற தலைப்பிலான உரையாடலின் போது ரிஷப் ஷெட்டி கூறினார்.
கன்னடத் திரையுலகில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ரிஷப் ஷெட்டி, உலிதவரு கண்டந்தே, கிரிக் பார்ட்டி, கதா சங்கமா, ரிக்கி போன்ற பல திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்றவர். அவரது ‘சர்காரி ஹி. பிரா. ஷாலே, காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய்’ 66வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதை வென்றது. ரிஷப் ஷெட்டி அண்மையில் இயக்கிய காந்தாரா பல வசூல் சாதனைகளை முறியடித்து வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்தப்படத்தில் அவர் நடித்துமுள்ளார்.
காந்தாரா மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே நடந்து வரும் மோதலை படம்பிடிக்கிறது. இது இயற்கை, கலாச்சாரம் மற்றும் புனைகதைகளின் கலவையாகும். நமது கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கை முறைகள் நம் ஒவ்வொருவரிடமும் வேரூன்றியுள்ளன என்றார் அவர். கேள்விப்பட்ட நாட்டுப்புறக் கதைகள் மற்றும் துளுநாட்டு கலாச்சாரத்தில் சிறுவயது அனுபவங்களின் விளைவாக இப்படம் உருவாகியுள்ளது. எனவே, திரைப்படத்தின் பின்னணி இசை இயற்கையாகவே கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ரிஷப் ஷெட்டி, தான் சிறுவயதில் இருந்தே யக்ஷகானா (யக்சகான) கலைஞர் என்று கூறினார். அவர் தொழில்துறையில் அடியெடுத்து வைத்ததில் இருந்தே கம்பளா, தெய்வாராதனே, பூதக் கோலங்கள் போன்ற கலாச்சாரங்களை படங்களில் காட்டுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. "துளுநாட்டில், தெய்வாராதனையின் போது அனைத்து சாதியினரும் சமத்துவம் பெற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், அது இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு பாலம்" என்று அவர் கருத்து தெரிவித்தார்.
காந்தாரா- வில் கம்பாலாவை நிகழ்த்துவதற்காக தினமும் கம்பாலா பயிற்சி செய்ததாகவும் அவர் கூறினார். நம்பிக்கைகள் மக்களின் இதயங்களுக்கு நெருக்கமாக இருப்பதால், எந்தவொரு கலாச்சார நடைமுறைகளையும் கேலி செய்ய வேண்டாம் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
காந்தாரா-வில் சிவன் பாத்திரம் பற்றி கூறிய அவர், சிறுவயதில் இருந்தே தனக்கு அத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறினார். அவர் முழு திரைப்படத்தையும் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான குந்தபுராவில் படமாக்கினார். அதில் நடித்தவர்களில், பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். நாடகக் கலைஞர்கள் என்று அவர் கூறினார்.
புதிய சந்தைகளை அடையாளம் காண்பது பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட ஷெட்டி, இன்று திரைப்படங்கள் மொழித் தடையைத் தாண்டி வருகின்றன என்றார். பல்வேறு மொழிகளில் இந்திய திரையரங்குகள் இருப்பதாகவும், உள்ளடக்கம் பார்வையாளர்களுடன் இணைந்தால், திரைப்படம் அகில இந்திய திரைப்படமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
90 களின் பிற்பகுதியில் பிராந்திய சினிமாக்கள் மேற்கத்திய திரைப்படங்களின் செல்வாக்கைக் கொண்டிருந்தன என்று அவர் கூறினார். இருப்பினும், இன்று உள்ளூர் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்து படங்கள் வருகின்றன. மொழித் தடை இருந்தபோதிலும், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் காந்தாரத்தை ஏற்றுக்கொண்டனர் என்றார் அவர்.
நடிப்பு மற்றும் இயக்கம் குறித்த அவரது கருத்துகள் குறித்து கேட்கப்பட்டபோது, "இயக்கமே எனது முன்னுரிமை" என்று கூறினார்.
**************
SRI / PKV / DL
(Release ID: 1878705)
Visitor Counter : 177