தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

ஜெர்மன் திரைப்படமான டிஸ்டன்ஸ் பெருந்தொற்றின்போது உருவாக்கப்பட்ட ஒரு 'நேர ஆவணம்' ஆகும்

ஜெர்மன் திரைப்படமான டிஸ்டன்ஸ் பெருந்தொற்றின்போது உருவாக்கப்பட்ட ஒரு 'நேர ஆவணம்' ஆகும். பேரழிவு தரும் தொற்றுநோயால் தூண்டப்பட்ட பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மையால் ஈர்க்கப்பட்டு இயக்குனர் லார்ஸ் நார்ன் இந்த திரைப்படத்தை உருவாக்கினார். கோவாவில் நடைபெற்றுவரும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘உலக சினிமா’ (சினிமா ஆஃப் தி வேர்ல்ட்) பிரிவில் டிஸ்டன்ஸ் (தூரம்) திரையிடப்பட்டுள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய இயக்குனர் லார்ஸ் நார்ன், "நம்மைச் சுற்றி நிகழும் அச்சம் மற்றும் மாற்றங்களுக்கு மத்தியில் முன்னோக்கி தள்ள வேண்டிய மனித தேவையை ஆராய முயற்சித்தேன்" என்று குறிப்பிட்டார்.

தொற்றுநோய்களின் போது தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் லாஸ்லோவின் வாழ்க்கையைச் சுற்றி இந்தப் படம் அமைந்துள்ளது. ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் உலகளாவிய தொற்றுநோயால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவு நேரத்தில் இப்படம் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் தொற்றுநோய்க்காக   அறிவிக்கப்பட்ட சமூக நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றினர். “படம் முடிந்தவரை யதார்த்தமானதாகவும், உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும்  இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நடிகர்கள் முகக்கவசம் அணிந்து நடிக்க வேண்டியிருந்தது. அப்போது எங்கள்  குழுவினர் முகக்கவசம் அணிந்தவர்களைப் படம் பிடிக்க தயக்கம் காட்டினர்.”, என்று அவர் கூறினார். 

ஆனால், இது தொற்றுநோயைப் பற்றிய படம் அல்ல என்று இயக்குனர் தெளிவுபடுத்தினார். "தொற்றுநோய் அதுவாகவே பிரச்சனை இல்லை, ஆனால் அது நமக்குள் இருந்த அனைத்து பிரச்சனைகளையும் நம் கண் முன் பெரும் பிரச்சனைகளாக கொண்டு வர ஒரு ஊக்கியாக செயல்பட்டது. லாஸ்லோ என்ற கதாபாத்திரம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதைக் காணும்போது, ஜோ ஒரு பிரச்சனை அல்லது வைரஸ் போன்று அபார்ட்மெண்டிற்குள் நுழைந்து ஒரு அழிவு சக்தியாக மாறுகிறார்" என்று அவர் கூறினார்.

"தொற்றுநோய் மனிதகுலத்தின் வாழ்க்கையை மாற்றிய தருணம். இதை படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் பிரதிபலிப்பது நம் கடமை. ஒரு இசைக்கலைஞர், புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் அல்லது திரைப்படத் தயாரிப்பாளர் என எந்த ஒருவரின் படைப்பிலும் தொற்றுநோயை புறக்கணிக்க முடியாது”, என்று லார்ஸ் நார்ன் குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் ஃபெலிக்ஸ் லீபெர்க் இதை ஒரு 'நேர ஆவணம்' என்று அழைத்தார். ஊரடங்கு இல்லாமல் இதை உருவாக்கியிருக்க முடியாது என்று அவர் கூறினார். ஊரடங்கு காலத்திலேயே இது படமாக்கப்பட்டுவிட்டது. "இது ஒரு காலம், வரலாற்றில் ஒரு தருணம், நாங்கள் ஒரு ஆக்கப்பூர்வமான வழியில் இதை பதிவு செய்ய விரும்பினோம்", என்று அவர் கூறினார். இந்திய சமுதாயத்தைப் பற்றி பேசுகையில், "இங்குள்ள வரலாறு மற்றும் கலாச்சாரம் இணக்கம், பகிர்தல், அன்பு மற்றும் பாசத்தை அதிகமாக கொண்டது " என்று குறிப்பிட்டார்.

தொற்றுநோய்க்கு மத்தியில் படத்தின் படப்பிடிப்பில் உள்ள சவால்கள் குறித்து கேட்கப்பட்டபோது, நடிகர்கள் ஹன்னா எர்லிச்மேன், லூகாஸ் இங்கிலாண்டர் ஆகிய இருவருமே, நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற பயம் இருந்தபோதிலும், குழுவுடன் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுடன் வாழ்வது தங்களை பாதுகாப்பாக உணர வைத்ததாகக் கூறினர். தொடர்ந்து அதிகரித்து வரும் சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கலான தன்மையிலிருந்து விடுதலை பெறுவதற்கான தூண்டுதலை படம் விவரிக்கிறது. "டிஸ்டன்ஸ்" திரைப்படம் இன்றைய நமது சமூகத்தின் பிரதிபலிப்பாகும். இழப்பு, மன அழுத்தம், அகங்காரம், பயம், தாம்பத்யம் மற்றும் காதல் ஆகியவற்றின் விளைவுகளை லாஸ்லோ மற்றும் ஸோ மிகத் தூய்மையான மனித மாண்புடன்  பகிர்ந்துகொள்கின்றனர். டிஸ்டன்ஸ் ஊரடங்கின்போது எழுதப்பட்டது, ஒரே ஒரு குடியிருப்பில் படமாக்கப்பட்டது மற்றும் முற்றிலும் சுதந்திரமாக தயாரிக்கப்பட்டது.

**************

SMB / SRI/ DL

iffi reel

(Release ID: 1878389) Visitor Counter : 188


Read this release in: English , Urdu , Marathi , Hindi