தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
எர்ஹார்ட் செக் திரைப்படத்தின் ஆசிய பிரிமியர் காட்சி 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
'நாட்டின் அரசியல் சூழ்நிலையின் பின்னணியில் ஒரு காதல் படம்', என்று இயக்குனர் ஜான் பிரேசினா தனது முதல் திரைப்படமான 'எர்ஹார்ட்' பற்றி விவரிக்கிறார். செக் குடியரசை சேர்ந்த இத்திரைப்படத்தின் ஆசிய பிரிமியர் (முதல்) காட்சி 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
செய்தியாளர் கூட்டத்தில் தனது நாட்டின் வரலாற்றைப் பற்றி பேசிய ஜான் பிரேசினா, “செக் குடியரசு 30 ஆண்டுகளுக்கு முன்பு சோசலிச ஆட்சியிலிருந்து முதலாளித்துவ ஆட்சியாக மாறியது. அது ஒருவித குழப்பமான சூழலை ஏற்படுத்தியது. அரசுக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களும் தனியார் மயமாக்கப்பட்டன. இதனால் பல குற்றங்கள் நடைபெற்றன. இவை அனைத்தும் முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்தவை. ஆனால் அது இன்றுவரை சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இன்று செக் குடியரசின் இளைய தலைமுறையினரால் இது எவ்வாறு உணரப்படுகிறது என்பதைப் பார்ப்பது எனது யோசனையாக இருந்தது.”, என்று கூறினார்
அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் அல்லது குளிர்காலத்தில் செக் குடியரசில் இப்படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் மரேக் நோவக் கூறினார். தனது நாட்டின் திரைப்பட சந்தையைப் பற்றிப் பேசுகையில், “திரைப்பட சந்தை அளவைப் பொறுத்தவரை இந்தியாவையும் செக் குடியரசையும் ஒப்பிடுவது அர்த்தமற்றது; நாங்கள் வெறும் 10 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு; ஒரு வருடத்தில் சுமார் 30-35 திரைப்படங்களை மட்டுமே உருவாக்குகிறோம்.” என்று கூறினார். கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில், தனது நாட்டில் வெளியிடக் காத்திருக்கும் படங்களின் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறது என்றும் ஒவ்வொரு வாரமும் ஐந்து முதல் ஆறு பிரீமியர் காட்சிகள் திரையிடப்படுகின்றன. தனது நாட்டை பொறுத்துவரை எண்ணிக்கை மிகவும் அதிகம் என்று அவர் கூறினார். எனவே, எர்ஹார்ட் குழு இந்த நிலை மாறி இயல்பு நிலை திரும்பும் வரை காத்திருக்க விரும்புகிறது, என்று அவர் மேலும் கூறினார்.
எர்ஹார்ட் 32-வது காட்பஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
**************
PKV/SRI/DL
(Release ID: 1878141)
Visitor Counter : 173