பாதுகாப்பு அமைச்சகம்

வலுவான மற்றும் தற்சார்புள்ள 'புதிய இந்தியா'வுக்கு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து உருவாக்கவும், நிறுவனங்களை அமைக்கவும் வேண்டும்: கர்நாடகாவில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு அமைச்சர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்

Posted On: 18 NOV 2022 3:57PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் கனவான வலுவான மற்றும் தற்சார்புள்ள 'புதிய இந்தியா'வுக்கு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து உருவாக்கவும், நிறுவனங்களை அமைக்கவும் வேண்டும் என இளைஞர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிப்பால் உயர்கல்வி அகாடமியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், இந்தியாவின் இளைஞர் சக்தியை உலகம் அங்கீகரித்திருப்பதாக கூறினார். கூகுள், மைக்ரோசாஃப்ட், அடோப், ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியர்களுக்கு மிக நல்ல வாய்ப்புகளை வழங்கி பணியமர்த்தி உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலியல் வளர்ச்சி அடைந்துள்ளதை பாராட்டிய அவர், இளைஞர்களின் சிறந்த அறிவாற்றலாலேயே இது சாத்தியமாகி உள்ளது என்றார். 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 400 முதல் 500 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்ததாகவும், தற்போது அதன் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவற்றில் 100-க்கும் மேற்பட்டவை உலக அளவில் அதிக முதலீட்டு புதிய தொழில்களாக மாறியுள்ளன. என்று அவர் தெரிவித்தார்.

புத்தகங்களிலிருந்து அறிவை பெற்றால் போதும் என்று  மட்டும் நினைக்க கூடாது என்று அவர் தெரிவித்தார். அறிவாற்றலை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே நாட்டை புதிய உச்சங்களுக்கு எடுத்து செல்ல முடியும் என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களை  தெரிந்து கொண்டு நமது வளம் மிக்க கலாச்சார பாரம்பரியங்களிலிருந்து மாணவர்கள் பலவற்றை கற்று கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். அறிவியல், பொருளாதாரம், நிர்வாகம் என பல துறைகளில் இந்தியா முன்னோடியாக திகழ்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அந்நிய படையெடுப்புகளால் அவை மறைந்ததாகவும் அவர் தெரிவித்தார். நமது பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்துக்காகவும் நமது கடந்த கால பெருமையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பாரம்பரிய மற்றும் நவீன அறிவாற்றலை வழங்கி இளையதலைமுறையை சிறந்த குடிமக்களாக மாற்றும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்கு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று அவர் தெரிவித்தார். அதேபோல், 2047-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா வளரும் என்றும் திரு.ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1877018

**************

MSV/PLM/KG/KRS

(Release ID: 1877018)



(Release ID: 1877132) Visitor Counter : 132


Read this release in: English , Urdu , Hindi