மத்திய அமைச்சரவை

நீர்வள மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் துறையில் இந்தியா - டென்மார்க் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 NOV 2022 3:03PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மைத் துறையில் இந்தியா மற்றும் டென்மார்க் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்து ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.  

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பரந்த அளவிலான ஒத்துழைப்பு அம்சங்கள்:

• டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தகவல் அணுகலை எளிதாக்குதல்

• ஒருங்கிணைந்த மற்றும் நவீன நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை;

• நீர்நிலை வரைபடம், நிலத்தடி நீர் மாதிரியாக்கம், கண்காணிப்பு மற்றும் மேம்படுத்துதல்;

• வருவாய் அல்லாத நீர் மற்றும் ஆற்றல் நுகர்வை குறைத்தல் உள்ளிட்ட வீடுகள் மட்டத்திலான திறன் வாய்ந்த மற்றும் நிலையான நீர் வழங்கல் நடைமுறைகள்

 

• வாழ்வாதாரம், மீட்சித் தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நதிகள் மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்தி தூய்மைப்படுத்துதல்

• நீர் தர கண்காணிப்பு மற்றும் மேலாண்மை

• கழிவுநீரை மறுபயன்பாடு / மறுசுழற்சி செய்வதற்கான சுழற்சிப் பொருளாதாரம் உட்பட கழிவுநீர்/கழிவுநீர் சுத்திகரிப்பு, விரிவான கழிவு நீர் மேலாண்மை, நீர் வழங்கல் மற்றும் தூய்மைப் பணிகள் பிரிவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துதல்;

• காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் செயல் திட்டங்களை ஏற்றல், இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் உள்ளிட்டவை

• நகர்ப்புற வெள்ளத் தடுப்பு மற்றும் வெள்ள மேலாண்மை உட்பட நதிகளை மையமாகக் கொண்ட நகர்ப்புற திட்டமிடல்

• புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் இயற்கை முறையில் திரவக் கழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை, கிராமப்புற நீர் வழங்கல், கழிவு நீர் மேலாண்மை/கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை பரந்த அளவில் வலுப்படுத்தும். அதிகாரிகள், கல்வியாளர்கள், நீர் தொடர்பான துறைகள் மற்றும் தொழில்துறையினர் இடையே நேரடி ஒத்துழைப்பு மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

பின்னணி:

பிரதமர் திரு நரேந்திர மோடி, டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் 28 செப்டம்பர் 2020 அன்று இந்தியாவிற்கும், டென்மார்க்கிற்கும் இடையிலான காணொலி வாயிலான உச்சி மாநாட்டிற்கு கூட்டாக தலைமை வகித்தனர். இதில் பசுமை செயல்திட்ட ஒத்துழைப்பு குறித்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் / நீர் மற்றும் சுழற்சி பொருளாதாரம், நவீன நகரங்கள் உள்ளிட்ட நிலையான நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளில்  ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டதாக அமைந்தது.

 

டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சன் இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 09 ஆம் தேதி அன்று முந்தைய கூட்டறிக்கையின் தொடர்ச்சியாக பசுமை செயல்திட்ட கூட்டு செயல்பாடு குறித்த ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பின்வரும் பிரகடனங்கள் வெளியிடப்பட்டன.

• நவீன (ஸ்மார்ட்) நீர் வள மேலாண்மைக்கான சிறப்பு மையத்தை நிறுவுதல் (CoESWaRM)

• பஞ்சியில் உள்ள நவீன நகர (ஸ்மார்ட் சிட்டி) ஆய்வகம் போன்று வாரணாசியில் தூய்மையான நதிகளுக்கான ஆய்வகத்தை நிறுவுதல்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் டென்மார்க் பயணத்தின் போது 3 மே, 2022 அன்று,  மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் டென்மார்க் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், அரசாங்கத்திற்கும், இடையே பொதுவான செயல்திட்டம் குறித்த இறுதி செய்யப்பட்ட வரைவு ஒப்பந்தத் திட்டம் (Lettet of intent) கையெழுத்தானது. இரண்டு புதிய முன்முயற்சிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த வரைவு ஒப்பந்தம் வகை செய்தது. நவீன நீர் வள மேலாண்மைக்கான உயர் திறன் மையம் மற்றும் வாரணாசியில் தூய்மையான நதி நீர் தொடர்பான நவீன ஆய்வகம் ஆகிய இரண்டும் இதில் அடங்கும். முழுமையான மற்றும் நிலையான அணுகுமுறை மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய பாதுகாப்பான மற்றும் தூய நீரை உறுதி செய்வதே இந்த, உத்தேசிக்கப்பட்ட ஒத்துழைப்பின் அடிப்படை நோக்கமாகும்.

அந்த வரைவு ஒப்பந்தத்தின் (Letter of intent) தொடர்ச்சியாக, மத்திய அரசின் நீர்வளத்துறையின் நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறைக்கும், டென்மார்க் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் இடையே, 12.09.2022 அன்று மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சரின் டென்மார்க் பயணத்தின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

**************

 

SM/PLM/RS/IDS



(Release ID: 1873143) Visitor Counter : 243