பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல்லைச்சாலை அமைப்பின் 75 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்

Posted On: 28 OCT 2022 2:57PM by PIB Chennai

எல்லைச் சாலை அமைப்பான பிஆர்ஓ உருவாக்கியுள்ள 75 உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  லடாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், 45 பாலங்கள், 27 சாலைகள், 2 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் உள்ளிட்ட 75 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அருணாச்சலப்பிரதேசம் உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய  யூனியன் பிரதேசங்களில் இவை அமைந்துள்ளன.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டங்கள்  ரூ.2,180 கோடி செலவில் குறைந்த காலத்தில் பிஆர்ஓ-வால் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சவாலான பருவநிலை சூழல்களுக்கு இடையே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள பிஆர்ஓ-வின் உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். இந்த திட்டங்கள் நாட்டின் பாதுகாப்பு தயார் நிலையை ஊக்குவிப்பதுடன், எல்லைப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.

தார்புக்-ஷியோக்-டிபிஓ சாலையில் 14,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள –ஷியோக் பாலம் 120 கி.மீ. நீளம் கொண்டதாகும். ஆயுதப்படையினரின் போக்குவரத்துக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்ய தொலைதூரப்பகுதிகளில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.  அரசின் இந்த உறுதிபாட்டுக்கு இந்த புதிய 75 திட்டங்கள் சான்றாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

 ஜம்மு காஷ்மீரில் சுதந்திரத்திற்கு பின்னர் பல பத்தாண்டுகளாக  உள்கட்டமைப்பு மேம்பாடு இல்லாததே அங்கு பயங்கரவாதம் அதிகரிக்க காரணமாகும். இத்தகைய உள்நாட்டு இடையூறுகள் காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்து லடாக் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு நாடு முழுவதும் எதிரொலித்தது.  இப்போது அரசின் முயற்சிகள் காரணமாக அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய புதிய உதயத்தை  காண முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.  நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியை தொடர்வதே எங்களது நோக்கம் என்று கூறிய அவர், பிஆர்ஓ நோக்கத்தை எட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.  விரைவில் அனைத்து தொலைதூரப்பகுதிகளையும் நாட்டின் மற்ற பகுதிகளுடன்  இணைப்பதன் மூலம்  நாட்டுக்கு புதிய உச்சத்தையும், முன்னேற்றத்தையும் அளிக்க  இணைந்து பாடுபடுவோம் என்று  அவர் வலியுறுத்தினார்.

**************

(Release ID: 1871518)

MSV/PKV/AG/KRS

 


(Release ID: 1871567) Visitor Counter : 131


Read this release in: English , Urdu , Hindi