கலாசாரத்துறை அமைச்சகம்

பிரதமர்களின் அருங்காட்சியகத்திற்கு செப்டம்பர் 30 வரை 1,15,161 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்

Posted On: 27 OCT 2022 5:14PM by PIB Chennai

புதுதில்லியின் தீன் மூர்த்தி சாலையில் உள்ள பிரதமர்களின் அருங்காட்சியகத்திற்கு செப்டம்பர் 30 வரை 1,15,161 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.  சாதனை எண்ணிக்கையாக 2022 அக்டோபர் 15 அன்று ஒரே நாளில் இந்த கண்காட்சியகத்திற்கு 3,233 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இந்த அருங்காட்சியகம் 2022 ஏப்ரல் 21 அன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், “மனம் கவரும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ள பிரதமர்களின் அருங்காட்சியகம் முன்னாள் பிரதமர்கள் மற்றும் தேசத்தலைவர்களின் ஒப்பற்ற பங்களிப்பின் நினைவை கலை நயத்தோடு எடுத்துரைக்கிறது. சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்தை விளக்குவதற்கு காலவரையறை இல்லாத களஞ்சியமாக இது உள்ளது” என்று வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கைய நாயுடு, நமது தேசிய தலைமைத்துவத்தின் பன்முகத் தன்மையை இந்த அருங்காட்சியகம், வெளிப்படுத்துவதோடு கவுரவம் செய்கிறது என்று வருகைபதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார். நம்மைப் போன்ற துடிப்புமிக்க ஜனநாயகத்திற்கு முக்கியமான அனைவரையும் உட்படுத்துதல் என்ற செய்தியையும் இது குறிக்கிறது என்றும் எழுதியுள்ளார்.

தற்போதைய பிரதமர்,  திரு நரேந்திர மோடி குறித்த தகவல் கூடம், புதிதாக இந்த அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட உள்ளது. இதனை 2023 ஜனவரியில் பொதுமக்கள் பார்வையிடலாம். இந்தியாவில் விண்வெளித்திட்டம் குறித்த ஒலி–ஒளி காட்சியை 2022 நவம்பரில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை பிரபல கல்வியாளர்கள் மற்றும் மக்கள் தலைவர்களைக் கொண்டு  சொற்பொழிவுத் தொடர்களை  நடத்தவும்,  திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் முதலாவதாக திரு அடல் பிகாரி வாஜ்பாய் குறித்து  முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் உரையாற்றுவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1871298

**************



(Release ID: 1871374) Visitor Counter : 161


Read this release in: Hindi , Odia , English , Urdu , Marathi