குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சமூகத்தில் ஆன்மிக மனநிலையை வளர்க்க குடியரசு துணைத்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்; ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறாது என்று அவர் கூறியுள்ளார்

Posted On: 25 OCT 2022 5:28PM by PIB Chennai

தேசத்திலிருந்து முறையற்ற தன்மையையும், நீதியற்ற நடத்தையையும் எதிர்மறை போக்கையும் களைவதற்கு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில்  ஆன்மிக மனநிலையை  வளர்ப்பதன் அவசியத்தை குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்  வலியுறுத்தியுள்ளார். ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் உள்ள பிரம்ம குமாரிகளின் உலகத் தலைமையகத்தில் “வலுவான, வளமான, பொன்னான இந்தியாவை நோக்கி” என்ற மையப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்ம குமாரிகளின்  85-வது ஆண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் இன்று உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர்  இதனைத் தெரிவித்தார்.  ஆன்மீகம் இல்லாமல் வாழ்க்கை நிறைவடையாது என்று கருத்துத் தெரிவித்த திரு தன்கர், ஆன்மிகத்தை கடைபிடிக்காவிட்டால் உலகம் முழுவதும் தற்போது நடைமுறையாகிவிட்ட தொழில்நுட்ப மாற்றம் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

நமது கல்வியில் ஆன்மிகம் என்பது இன்றியமையாத பகுதி என்றும் இது ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். உலகம் முழுமையும் ஆன்மிகத்தையும், நற்சிந்தனையையும் பரப்பி வரும் பிரம்ம குமாரிகளை அவர் பாராட்டினார்.

இந்திய நாகரீக மாண்புகளை வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கையை புகழ்ந்துரைத்த அவர், சரியான கல்வி, சரியான சிந்தனை, சரியான ஞானம் மட்டுமே தமது தேசத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றும் என்றார். 

பருவநிலை மாற்றத்தை முறியடிக்க இருபது லட்சம் மரக்கன்றுகள் நட்டதற்காக பிரம்ம குமாரிகளை பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், இந்த அமைப்பு ஈடுஇணையற்றது என்றும் மனித குலத்திற்கு மட்டுமின்றி, இந்த புவிக்கோளத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு காட்டுகிறது  என்றும் கூறினார்.

ராஜஸ்தான் மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் திரு சுக்ராம் பிஷ்ணோய், பிரம்ம குமாரிகள் அமைப்பின் கூடுதல் தலைவர் ராஜயோகினி பி கே ஜெயன் பென் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் டாக்டர் சுதேஷ் தன்கருடன் ராஜஸ்தானில் உள்ள தில்வாரா ஆலயம் மற்றும் நாத் துவாரா ஆலயத்தில் குடியரசு துணைத்தலைவர் வழிபாடு செய்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1870820

----- 

SMB/GEE/ANAND/SHA


(Release ID: 1870832) Visitor Counter : 150


Read this release in: Marathi , English , Urdu , Hindi