மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஐஐடிக்கள் அறிவு மற்றும் அனுபவ களஞ்சியங்களாக திகழ்வதுடன், எதிர்கால இடைவெளியையும் நிரப்புகின்றன – திரு தர்மேந்திர பிரதான்
Posted On:
14 OCT 2022 4:16PM by PIB Chennai
தில்லியில் உள்ள ஐஐடியில், அனைத்து ஐஐடிக்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறனை பறைசாற்றும் இன்வென்டிவ் என்னும் இரண்டு நாள் நிகழ்ச்சியை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார். இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் வலிமையை பறைசாற்றும் விதமாக கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் ஒரே கூரையின் கீழ் கலந்து கொள்ளும் நிகழ்வாக இது அமையும்.
இந்த நிகழ்ச்சியில் பாரதி என்டர்பிரைசஸ் தலைவரும், நிறுவனருமான திரு சுனில் பாரதி மிட்டல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்வென்டிவ் வழிகாட்டும் குழுவின் தலைவர் டாக்டர் பவன் கோயங்கா, இணைத் தலைவர் டாக்டர் பி வி ஆர் மோகன் ரெட்டி ஐஐடி மும்பை இயக்குனர் டாக்டர் சுபாசிஸ் சௌத்ரி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு தர்மேந்திர பிரதான், தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கிற்கு சான்றாக, வரலாற்றின் முதல் நிகழ்வாக இது இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். ஐஐடிக்கள் வெறும் தொழில்நுட்ப, கல்வி நிறுவனங்களாக மட்டும் இல்லாமல் மாற்றத்திற்கான தூண்டுகோலாக அமைந்துள்ள என்று அவர் கூறினார்.
ஐஐடிக்கள் அறிவு மற்றும் அனுபவ களஞ்சியங்களாக திகழ்வதுடன், எதிர்கால இடைவெளியையும் நிரப்புகின்றன என அவர் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்று தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் மனித குலத்திற்கு சேவை புரிவதை தெளிவாக காட்டியுள்ளது என்றும், குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்திய தடுப்பூசிகள் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு பயன் அளித்துள்ளன என்றும் திரு பிரதான் கூறினார்.
பாதுகாப்பு மற்றும் விண்வெளி, சுகாதார சேவை, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை (காற்று, நீர், ஆறுகள் உள்ளிட்டவை), தூய்மையான எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்கவை (ஹைட்ரஜன், மின் வாகனங்கள் உள்ளிட்டவை) உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் (கல்வி மற்றும் 5ஜி உள்ளிட்டவை) ரோபோடிக்ஸ், செமிகண்டக்டர்கள், நெகிழ்வு தன்மை கொண்ட மின்னணு, நானோ தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வகையான 75 திட்டங்கள் மற்றும் கருப்பொருட்கள் கண்காட்சியில் இடம்பெறும். மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா ஆகியவற்றுடன் இவை தொடர்புடையதாக இருக்கும்.
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (பிக்கி), தேசிய மென்பொருள் சேவை நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்) ஆகியவற்றின் பிரதிநிதிகள், மாணவர்கள், உலகம் உள்ள ஐஐடி பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், டிஆர்டிஓ, இஸ்ரோ, சிஎஸ்ஐஆர், ஐசிஏஆர் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.
**************
(Release ID: 1867835)
Visitor Counter : 159