பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டில் பிரதமரின் உரை

Posted On: 23 SEP 2022 4:10PM by PIB Chennai

குஜராத் முதல்வர் திரு பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு பூபேந்திர யாதவ் அவர்களே, திரு அஸ்வினி சௌபே அவர்களே, அனைத்து மாநிலங்களின் அமைச்சர்களே, மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான புதிய இலக்குகளை இந்தியா நிர்ணயிக்கும் வேளையில் நாம் சந்திக்கிறோம். உங்களது முயற்சி, சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் என்றும், அதே வேகத்தில் இந்தியாவும் தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்றும் நான் நம்புகிறேன். புதிய சிந்தனை மற்றும் அணுகுமுறையோடு இன்று முன்னேறி வரும் புதிய இந்தியாவின் பொருளாதாரம் மிக விரைவாக வளர்வதோடு, அதன் சுற்றுச்சூழலும் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நமது வேகம் மற்றும் அளவிற்கு ஈடாக எந்த நாடும் செயல்பட முடியாது என்பதை உலகிற்கு நாம் உணர்த்தியுள்ளோம். சர்வதேச சூரிய ஒளி கூட்டணி, பேரிடர் நெகிழ்தன்மை உள்கட்டமைப்பிற்கான கூட்டணி அல்லது லைஃப் இயக்கம் உள்ளிட்ட எந்த ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதிலும் இதர நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டியாகத் திகழ்கிறது.

 நமது உறுதிப்பாடுகளை நாம் நிறைவேற்றுவதன் காரணமாக இதர நாடுகள் இந்தியாவுடன் தற்போது கைகோர்க்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் சிங்கம், புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்திற்கு சிறுத்தைகளை மீண்டும் கொண்டுவந்தது, அனைவரிடத்திலும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையுடன் இணைந்த இந்த முயற்சிகளை நாம் தொடர்வதோடு எதிர்கால தலைமுறையினரையும் ஊக்குவிப்போம். இந்த உறுதிப்பாட்டுடன் அடுத்த ஐந்து தசாப்தங்களில், அதாவது 2070-க்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லை என்ற நிலையை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

நண்பர்களே,

மத்திய மற்றும் மாநில அளவில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பொறுப்பு மிக முக்கியமானது. வெறும் கண்காணிப்பு என்பதையும் தாண்டி, சுற்றுச்சூழலை ஊக்குவிப்பதில் இந்த அமைச்சகத்தின் பங்கு அளப்பரியது. சுழற்சி பொருளாதாரத்தை தங்களது மாநிலங்களில் கூடியவரையில் ஊக்குவிக்குமாறு இங்கு குழுமியுள்ள அனைத்து சுற்றுச்சூழல் அமைச்சர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்த உணர்வு ஏற்படும் போது திடக்கழிவு மேலாண்மை மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களிலிருந்து விடுதலை போன்ற செயல்களுக்கு வலிமை கிடைக்கும்.

 இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியின்போது நாட்டின் வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாக எதிர்கால சந்ததியினரை மாற்றுவதற்கும், மேம்பட்ட வாய்ப்புகளைப் பரிந்துரைக்கும் மற்றும் சரியான திசையை வழங்குவதற்கான நன்கு வரையறுக்கப்பட்ட திட்டங்களை நீங்கள் தயாரிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

**************

(Release ID:1861731)


(Release ID: 1863272) Visitor Counter : 126