நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“சட்டவிரோத கடன் செயலிகள்” குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது

Posted On: 09 SEP 2022 2:18PM by PIB Chennai

முறைப்படியான வங்கி நடவடிக்கைகளுக்கு வெளியே “சட்டவிரோத கடன் செயலிகள்” தொடர்பான பல்வேறு விஷயங்கள்  குறித்து விவாதிக்க மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (08.09.2022) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் நிதிப்பிரிவு செயலாளர் பொருளாதார விவகாரங்கள் பிரிவு செயலாளர், வருவாய் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் (கூடுதல் பொறுப்பு) செயலாளர், நிதிச் சேவைகள் பிரிவு செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)யின் துணை கவர்னர், இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நலிந்த பிரிவு மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு அதிக வட்டி விகிதங்கள், செயல்முறை கட்டணங்கள் இல்லாமல் கடன்கள் மற்றும் நுண் கடன்கள் வழங்குவதாக சட்டவிரோத கடன் செயலிகள் பற்றிய தகவல்கள், மிரட்டுதல்  மற்றும் குற்றச் செயல்கள் மூலம் முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறுதல் போன்ற சம்பவங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர்  கவலை தெரிவித்தார். இதன் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குதல், வரிஏய்ப்பு, தனிநபர் தரவுப்பாதுகாப்பை மீறுதல், ஒழுங்குப்படுத்தப்படாமல் பணம் செலுத்து முறையை தவறாக பயன்படுத்துதல். போலி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடின்மை போன்றவற்றுக்கான சாத்தியக் கூறுகளையும் திருமதி சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சனையின் சட்ட ரீதியான, நடைமுறை ரீதியான, தொழில்நுட்ப ரீதியான, அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்தப் பின் கீழ் காணும் முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

  • அனைத்து சட்டப்பூர்வமான செயலிகளின் “வெள்ளை அறிக்கை”யை ஆர்பிஐ தயாரிக்கும். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள செயலிகளை மட்டும்  ஆப்  ஸ்டோர்கள் வழங்குவதை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உறுதி செய்யும்.
  • கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன்படுத்தும் போலிக் கணக்குகளை ஆர்பிஐ கண்காணிக்கும் செயல்படாத வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க அது ஆய்வு செய்யும் அல்லது ரத்து செய்யும்.
  • குறிப்பிட்ட கால வரம்புக்குள் வர்த்தக கணக்கு வைத்திருப்போர் பதிவு பூர்த்தி செய்யப்படுவதை ஆர்பிஐ உறுதிப்படுத்தும். இதன் பிறகு பதிவு செய்யப்படாத வர்த்தக கணக்கு வைத்திருப்போர் பணம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  
  • தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க போலி நிறுவனங்களை கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் கண்டறிந்து அவற்றை பதிவிலிருந்து நீக்கும்.
  • வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள், சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் தொடர்புடையவர்களுக்கு கணினி சார்ந்த விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • இத்தகைய சட்டவிரோத கடன் செயலிகள்  செயல்படுவதை தடுப்பதற்கு அனைத்து அமைச்சகங்களும், முகமைகளும், சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இவை நடைமுறைப்படுத்தப்படுவதை தொடர்ச்சியாக நிதியமைச்சகம் கண்காணித்து வரும்.

-----


(Release ID: 1858112) Visitor Counter : 360